புதிய நாடாளுமன்றம் மாதிரி வரைபடம் வெளியீடு

புதிய நாடாளுமன்றக் கட்டிடமானது முக்கோண வடிவத்தில் அமையவுள்ளதை போன்ற மாதிரி வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 1,350 பேர் வரை தாராளமாக அமரக் கூடிய வகையில் இந்தப் புதிய நாடாளுமன்றம் அமையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் தற்போது பயன்பாட்டில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடமானது ஆங்கிலேயேர் ஆட்சிக்காலத்தில் 1927-ம் ஆண்டு கட்டப்பட்டது ஆகும். எட்வின் லூடெய்ன்ஸ், ஹெர்பெர்ட் பேக்கர் ஆகிய இங்கிலாந்து பொறியாளர்கள் இந்தக் கட்டிடத்தை வடிவமைத்திருந்தனர். இந்நிலையில், இந்த நாடாளுமன்றக் கட்டிடம் கட்டப்பட்டு 93 ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதை கவனத்தில் கொண்டும், புதிதாக ஒரு நாடாளுமன்றக் கட்டிடத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்தது. குறிப்பாக, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மத்திய அரசிடம் கடந்த ஆண்டு ஒரு கோரிக்கை விடுத்திருந்தார். அதில், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார். இவை அனைத்தையும் கருத்தில்கொண்டு, தற்போது இருக்கும் நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு மாற்றாக புதிய கட்டிடத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, வரும் 2024-ம் ஆண்டுக்குள் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை அமைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்தப் புதிய கட்டிடத்திற்கான ஒப்பந்தமானது குஜராத்தில் உள்ள ‘ஹெச்.சி.பி. டிசைன்' என்ற நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்நிறுவனமானது புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மாதிரி வரைபடத்தை நேற்று வெளியிட்டது. அந்த வரைபடத்தின் படி, புதிய நாடாளுமன்றக் கட்டிடம் முக்கோண வடிவில் அமையவுள்ளதாக தெரிகிறது. அதன் மேற்பரப்பில் கூம்பு வடிவிலான ஓர் அமைப்பும், அதற்கு அருகில் மூவர்ணத்துடன் கூடிய ஸ்தூபி (அரைக்கோளம்) வடிவ அமைப்பும் உள்ளன. பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தின் அருகாமையில் 13 ஏக்கர் பரப்பில் இந்தப் புதிய நாடாளுமன்றத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 1,350 எம்.பி.க்கள் வரை தாராளமாக அமரலாம் என்றும், மக்களவையில் மட்டும் 900 எம்.பி.க்கள் வரை அமர முடியும் என்றும் ‘ஹெச்.சி.பி. டிசைன்' நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்டிடத்தின் வடிவமைப்பாளர் பிமல் படேல் மேலும் கூறியதாவது: புதிய நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் தாராளமாக அமரும் வகையில் இருக்கை வசதிகளை அமைக்கவுள்ளோம். தற்போதைய மக்களவையில் எம்.பி.க்களுக்கான இருக்கைகள் மிகக் குறுகலாக இருக்கின்றன. போதிய இடமில்லாத காரணத்தால், தூண்களுக்கு பின்னால் கூட இருக்கைகள் போடப்பட்டிருக்கின்றன. இந்த நெருக்கடியை களையும் விதமாக, புதிய நாடாளுமன்றத்தில் பெரிய அளவிலான இருக்கைகளை வடிவைத்திருக்கிறோம். இவற்றில் இரண்டு பேர் வரை அமரலாம். நாடாளுமன்றக் கூட்டுக் குழுக் கூட்டத்தின்போது 3 எம்.பி.க்கள் வரை கூட ஒரே இருக்கையில் அமர்ந்துகொள்ள முடியும். அதேபோல், சபாநாயகர் அல்லது ஒரு எம்.பி. பேசும்போது அனைத்து உறுப்பினர்களும் தெளிவாக கேட்கும் வகையிலும் கட்டிடத்தின் உள்பக்கம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தின் வெளிப்புறத்தில் அமைச்சக அலுவலகங்களை அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிலையில், பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தை அருங்காட்சியமாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு