பத்திரிகை பதிவு சட்டத்துக்கும் பதில் புதிய மசோதா

பழமையான பத்திரிகை மற்றும் புத்தக பதிவு சட்டம் 1867க்கு பதிலாக புதிய சட்ட மசோதா வரைவை மத்திய அரசு தயாரித்துள்ளது. பத்திரிகை மற்றும் புத்தக பதிவு சட்டம் 1867ன்படி இந்தியாவில் வெளியாகும் அனைத்து பத்திரிகைகளும் முறைப்படி பதிவு செய்யப்படுவது கட்டாயமாகும். இன்றைய காலத்துக்கு ஏற்ப இந்த சட்டத்தில் மாற்றங்களைச் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி பழைய சட்டத்துக்குப் பதிலாக 'பத்திரிகை மற்றும் பருவ இதழ்கள் 2019' சட்ட மசோதா வரைவை மத்திய அரசு தயாரித்துள்ளது. புதிய மசோதா வரம்பில் டிஜிட்டல் ஊடகங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் 25ம் தேதி வரைவு மசோதா வெளியிடப்பட்டு ஒரு மாதத்துக்குள் பொது மக்கள் கருத்துகளை தெரிவிக்க கோரப்பட்டிருந்தது. பின்னர் இந்த கால அவகாசம் வரும் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. புதிய மசோதாவின்படி பத்திரிகை, பருவ இதழ் மற்றும் டிஜிட்டல் ஊடக நிறுவனங்கள் உள்ளூர் நிர்வாகத்திடம் ஆவணங்களை சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை. இந்திய செய்தித்தாள்கள் பதிவாளரிடம் (ஆர்என்ஐ) நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம். தற்போதைய சட்டத்தின்படி விதிகளை மீறும் பதிப்பாளருக்கு 6 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. புதிய மசோதா வரைவில் சிறை தண்டனைப் பிரிவு நீக்கப்பட்டுள்ளது. அரசு விளம்பரங்கள், இதர அறிவிப்புகளை நாளிதழ்களில் வெளியிடுவது தொடர்பான சட்ட விதிகளை மத்திய, மாநில அரசுகளே வரையறுத்துக் கொள்ள புதிய மசோதா வரைவு வழிவகை செய்கிறது. புத்தகங்களை வெளியிடும் பதிப்பாளர்களின் பதிவு ரத்து மற்றும் சஸ்பெண்ட் விதிகளில் புதிய விதி சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி பதிப்பாளர்கள், ஏதோ ஒரு குற்றத்துக்காக நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டால் அவர்களின் பதிவு உரிமம் ரத்து செய்யப்படும். குறிப்பாக தீவிரவாத நடவடிக்கை அல்லது சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு குற்றவாளிகளாக அறிவிக்கப்படும் பதிப்பாளர்கள் மீது இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)