புதுக்கோட்டை, கமுதி, ஆரணியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படவில்லை

புதுக்கோட்டை, கமுதி, ஆரணியில் வாக்கு எண்ணிக்கை இதுவரை தொடங்கப்படவில்லை. தமிழகத்தில் சென்னை மற்றும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த டிச.27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. முதல் கட்டமாக டிச.27-ம் தேதி 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடந்தது. இதில் 76.19 சதவீதம் வாக்குகள் பதிவாகின. தொடர்ந்து 2-ம் கட்ட தேர்தல் 158 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் 30-ம் தேதி நடந்தது. இதுதவிர, பல காரணங்களுக்காக முதல்கட்ட தேர்தலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 30 வாக்குச் சாவடிகளுக்கும் மறுவாக்குப் பதிவு நடத்தப்பட்டது. 2-ம் கட்ட தேர்தலில் 77.73 சதவீதம் வாக்குகள் பதிவாகின. மேலும், 2-ம் கட்ட தேர்தலில் வாக்குச்சீட்டு மாறியதால் நிறுத்தி வைக்கப்பட்ட 9 வாக்குச்சாவடி களில் நேற்று மறுவாக்குப்பதிவு நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப் பெட்டிகள், அந்தந்த பகுதிக்கான வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலைப் பொறுத்தவரை வாக்குச்சீட்டு முறை பயன்படுத்தப்பட்டது. 4 பதவிகளுக்கும் தனித்தனி நிறத்தில் வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட்டன. கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடிகளில் மட்டும் பரீட்சார்த்த முறையில் 4 பதவிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. அந்த இயந்திரங்களும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 315 மையங்களில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. புதுக்கோட்டையில் வாக்கு எண்ணும் மைய அதிகாரிகள் பணி ஒதுக்கீட்டில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படவில்லை. ராமநாதபுரம் கமுதி ஒன்றியத்தில் வாக்குச்சீட்டுகளை பிரித்தெடுக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படவில்லை. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஊராட்சி ஒன்றிய வாக்குகள் எண்ணும் பணி இதுவரை தொடங்கப்படவில்லை. அதிகாரிகள் எந்தெந்த அறைகளுக்குச் செல்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால், வாக்கு எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்