நெல்லை கண்ணன் தர்பார் யாரை திருப்திபடுத்த இந்த கைது கண்டிசன்பெயில் கலங்கிய கண்ணன்

டிசம்பர் 29-ம் தேதி, நெல்லை மேலப்பாளையத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டை நடத்தியது எஸ்.டி.பி.ஐ கட்சி. எழுத்தாளரும் பேச்சாளருமான நெல்லை கண்ணன், அதில் சிறப்பு விருந்தின ராகப் பங்கேற்றார். மைக்கைப் பிடித்ததுமே பிரதமர் மோடியையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் கடுமையாகச் சாடிய நெல்லை கண்ணன், “பிரதமர் மோடிக்கு மூளையாகச் செயல்படுவது அமித் ஷாதான். அமித் ஷா சோலி முடிஞ்சுட்டுன்னா இவர் சோலி முடிஞ்சிடும். நீங்க ஒருத்தரும் முடிக்க மாட்டீங்களே... நீங்க ஏதாவது பண்ணுவீங்கனு நானும் நினைச்சுக்கிட்டு இருக்கேன். ஒரு சாயுபும் பண்ணித் தொலைய மாட்டேங்குறான்” என்று அதிர்ச்சியளிக்கும் வகையில் பேசினார். இந்தப் பேச்சின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவ, பா.ஜ.க-வினர் கொந்தளிக்க ஆரம்பித்தனர். 'நெல்லை கண்ணன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பா.ஜ.க-வினர் போலீஸில் புகார் கொடுத்ததுடன், நெல்லை கண்ணன் வீட்டு முன்பாக முற்றுகைப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இடையில் நெஞ்சுவலி என்று மருத்துவமனையில் நெல்லை கண்ணன் அனுமதிக்கப்பட்டதும் நடந்தது. இந்த நிலையில் பெரம்பலூரில் உள்ள தனியார் லாட்ஜில் வைத்து அதிரடியாகக் கைது செய்த போலீஸ், அவர்மீது இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசுதல், இரு சமூகங்களுக்கு இடையே கலவரத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்துள்ளது. இந்த நிலையில் நெல்லை கண்ணன் பேசியது தவறு என்று ஆளுங்கட்சியினரும், அவரைக் கைது செய்தது தவறு என்று எதிர்க்கட்சியினரும் கூறிவருகின்றனர். "மத்திய அரசின் மோசமான செயல்பாடுகளின் மீதுள்ள கோபத்தாலும், விரக்தியாலும்தான் அப்படிப் பேசினார். மற்றபடி அதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தைத் திசைதிருப்பவே அவர்மீது வழக்கு பதிவுசெய்துள்ளனர். உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும். இல்லை யெனில், தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவோம்” எனத் தெரிவித்துள்ளார். நெல்லை கண்ணனின் வழக்கறிஞரான பிரம்மாவிடம் பேசினோம். "யாரையோ திருப்திப்படுத்துவதற்காக அவரைக் கைது செய்திருக்கின்றனர். 'பிரதமருக்கும் உள்துறை அமைச்சருக்கும் தேர்தலின்போது குறைவான எம்.பி-க்கள் கிடைக்கச் செய்திருந்தால் சோலி முடிந்திருக்கும்' என்கிறரீதியில் பேசியதைத் திரித்து, வழக்கு பதிந்திருக்கின்றனர். 500 வருடங்களுக்கு முந்தைய சொற்களஞ்சியம் புத்தகத்தில்கூட 'சோலி என்ற வார்த்தைக்கு 'வேலை' என்றுதான் பொருள் உள்ளதாகக் குறிப்பிடப் பட்டிருக்கிறது. மதநல்லிணக்கத் துக்கு விரோதமாக அவர் எதையும் பேசவில்லை ” என்றார். இந்து முன்னணி மாநில நிர்வாகக் குழு உறுப்பினரான குற்றாலநாதனிடம் கேட்டதற்கு, “இஸ்லாமிய மக்கள் மத்தியில் இந்து கடவுள்கள் பற்றியும் இந்துக்களின் வழிபாடு பற்றியும் கேவலமாகப் பேசியுள்ளார் நெல்லை கண்ணன். இரு சமூகங்களுக்கிடையே வன்முறையைத் தூண்டும் வகையில் நெல்லை வட்டாரத்தில் 'சோலியை முடிங்க' என்று சொல்வதன் அர்த்தம் என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். அதுவும், 'நீங்க யாரும் சோலிய முடிக்காம இருக்கீங்க' என்று இஸ்லாமியர்களைப் பார்த்துக் கேட்டதன் மூலம் அவர்களைக் கொலையாளிகளாகச் சித்திரிக்கிறார். தங்கள் சமூகத்தை அவமதிக்கும்வகையில் பேசியிருக்கும் நெல்லை கண்ணனை, இஸ்லாமியர்கள் கண்டிக்க வேண்டுமே தவிர... ஆதரவு கொடுக்கக் கூடாது" என்றார் காட்டமாக..


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)