தேனியில் இரவில் நடந்த களேபரங்கள் கைது, மறியல் சம்பவங்கள்!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் தேனியில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், நேற்று மாலை, கம்பத்தில் நடந்த எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்துக்கு வருகை தந்த தேனி எம்.பி ரவீந்திரநாத் குமாரின் காரை மறித்து போராட்டம் நடத்தினர், இஸ்லாமிய அமைப்பினர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சின்னமனூர், ஆண்டிபட்டி வரிசையில், நேற்று கம்பத்திலும் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள தனது ஆதரவாளர்களுடன் காரில் ரவீந்திரநாத் குமார் கம்பம் வந்தார். கார், கம்பம் நகருக்குள் நுழைந்ததும், சாலையில் இருபுறம் நின்றிருந்த இஸ்லாமிய அமைப்பினர்கள், கறுப்புக் கொடியோடு ரவீந்திரநாத்குமாரின் காரை மறித்தனர். காரின் முன்பக்கம் வேகமாக கைகளால் தட்டி, கண்டன கோஷங்களை எழுப்பினர். இதைக்கண்ட போலீஸார் வேகமாக செயல்பட்டு, அனைவரையும் குண்டுக்கட்டாக தூக்கி சாலை ஓரத்தில் கொண்டுவந்து, ரவீந்திரநாத்குமாரின் கார் செல்ல வழி செய்தனர். ரவீந்திரநாத்குமார் காரின் பின்னால் வந்த பி.ஜே.பி நிர்வாகி ஒருவரது காரைக் கண்ட இஸ்லாமிய அமைப்பினர்கள், அதைத் தாக்கினர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 43 பேர் கைது செய்யப்பட்டனர். ரவீந்த்ரநாத் குமார் கார் மறிக்கப்பட்டது குறித்தும் இஸ்லாமிய அமைப்பினர்கள் கைது செய்யப்பட்டது குறித்தும் செய்திகள் தேனி முழுவதும் பரவியது. இதனால் ஆத்திரமடைந்த இஸ்லாமிய அமைப்பினர் சுமார் 300 பேர், பெரியகுளம் தண்டுபாளையம் பகுதியிலும், தேவதானப்பட்டி - திண்டுக்கல் சாலையிலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்பினரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்ததோடு, ஓ.பி.எஸ்ஸுக்கு எதிரான கண்டன கோஷங்களையும் எழுப்பினர். இதனால் தேனி-திண்டுக்கல் போக்குவரத்து சுமார் 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது. இஸ்லாமிய அமைப்பினர்கள் போராடியதை அடுத்து, ரவீந்திரநாத் குமாரின் கார் தாக்கப்பட்டதைக் கண்டித்து அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க-வினர் பெரியகுளம், கூடலூர், ஆண்டிபட்டி ஆகிய இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். பெரியகுளத்தில், இஸ்லாமிய அமைப்பினர்களும் அ.தி.மு.க-வினரும் போராட்டம் நடத்தியதால் பதற்றமான சூழல் நிலவியது. நிலைமையை அறிந்த மாவட்ட காவல்துறை, கைது செய்யப்பட்ட 43 பேரையும் விடுவித்தது. இதனால், இஸ்லாமிய அமைப்பினர்களின் போராட்டம் கைவிடப்பட்டது. கடந்த மாதம் பெரியகுளத்தில் உள்ள தேனி எம்.பி ரவீந்திரநாத் குமார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்த இஸ்லாமிய அமைப்புகள், சுமார் 500 பேருடன் எம்.பி அலுவலகம் நோக்கி வந்தனர். இதையறிந்த அ.தி.மு.க-வினர், எம்.பி அலுவலகம் முன்பாக கூடினர். இருதரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழல் நிலவியதால், காவல்துறையினர் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தது குறிப்பிடத்தக்கது. அதையடுத்து, நேற்று இருதரப்புக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இந்த தொடர் சம்பவங்கள் தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)