வீடியோ எப்போது தாக்கல் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

13 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பதிவான சிசிடிவி காட்சிகள் எப்போது தாக்கல் செய்யப்படும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் வரம்பிற்குட்பட்ட 13 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கையின்போது பதிவான சிசிடிவி காட்சிகளை ஜனவரி 3ம் தேதி மாலைக்குள் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் கோரி மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிசிடிவி கேமரா பதிவுகள் 7000 க்கும் அதிகமாக உள்ளதால் பதிவிறக்கம் செய்யும் பணி நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய தாமதம் செய்வது தேவையற்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், வழக்கை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.