தந்தை பெரியாரின் கருத்துக்கள் கோபுரங்களில் வைக்கப்பட வேண்டியவை என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

ஜனவரி 14ஆம் தேதி துக்ளக் இதழின் 50வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். இதில் 1971ல் சேலத்தில் நடந்த நிகழ்வு குறித்து அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து தமிழகத்தின் பல்வேறு காவல்நிலையங்களில் ரஜினிகாந்த் மீது புகாரளிக்கப்பட்டது. மேலும், ரஜினிகாந்த் தன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும், கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இதைத்தொடர்ந்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து ரஜினிகாந்த் விளக்கமளித்தார். “ராமர், சீதை சிலைகள் உடையில்லாமல் ஊர்வலத்தில் எடுத்துவரப்பட்டதை பலரும் ஊர்ஜிதப்படுத்தியுள்ளனர். எனவே 1971-இல் சேலத்தில் நடந்த பேரணி குறித்து கற்பனையாக நான் எதுவும் கூறவில்லை. அதனால் என் பேச்சுக்கு மன்னிப்போ, வருத்தமோ கேட்க மாட்டேன். இது மறுக்கக் கூடிய சம்பவம் அல்ல. மறக்க வேண்டிய சம்பவம்" என்று திட்டவட்டமாக தெரிவித்தார். ரஜினியின் இந்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளன.இந்த நிலையில், ரஜினி கருத்து குறித்து துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தந்தை பெரியாரின் கருத்துக்கள் கோபுரங்களில் வைக்கப்பட வேண்டியவை எனத் தெரிவித்தார். மேலும், “என்னைப் போன்றவர்கள் உயரிய நிலையை அடைய தந்தை பெரியாரே காரணம். பெரியாரின் கருத்துக்களை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு பேச வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.