கோலத்துக்காகக் கைதான பெண் குறித்து சென்னை கமிஷனர்

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன்தொடர்ச்சியாகக் கடந்த வாரம் சென்னை பெசன்ட் நகரில், வீடுகளில் கோலம் போட்டு குடியுரிமை சட்டத்துக்கு எதிரான வாசகங்களை எழுதி ஒரு குழுவினர் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். பின்னர் கோலம் போட்டவர்கள், காவலர்களால் கைது செய்யப்பட்டு அடுத்த சில மணி நேரங்களில் விடுவிக்கப்பட்டார்கள். இந்தத் தகவல் வெளியான பிறகு போராட்டக்காரர்களைக் கைது செய்த காவல்துறையினருக்கும் அரசுக்கும் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். அதுமட்டுமல்லாது தங்கள் வீடுகளிலும் கோலம் மூலம் குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை கமிஷனர் ஏ.கே விஸ்வநாதன், போராட்டக்காரர்களின் கைது தொடர்பாகப் பேசியுள்ளார். ``கோலம் போடும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் விவரங்கள் சோதனை செய்யப்பட்டன. அவர்களில் காயத்ரி கந்தாடை என்ற பெண்ணின் ஃபேஸ்புக் பக்கத்தில், பைட்ஸ் ஃபார் ஆல் என்ற பாகிஸ்தான் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நிறுவனம், அசோஷியேசன் ஆஃப் ஆல் பாகிஸ்தான் சிட்டிசன் ஜர்னலிஸ்ட் (Association of All Pakistan Citizen Journalists) என்ற அமைப்பைச் சேர்ந்தது. காயத்ரி எந்த அளவுக்குப் பாகிஸ்தானுடன் தொடர்பில் உள்ளார், இவருக்கும் அந்த அமைப்புக்கும் என்ன தொடர்பு என்ற விவரங்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இவருக்கு இங்கு இருக்கும் சில அமைப்புகள் ஆதரவாக உள்ளன. அதைப் பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது. கோலம் போட்டதால் யாரும் கைது செய்யப்படவில்லை என்பதை நான் இங்கு தெரிவிக்க விரும்புகிறேன். முதலில் அவர்கள் கோலம் போடும் போராட்டத்துக்கு அனுமதி கேட்டார்கள். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதையும் மீறி பெசன்ட் நகரில் சில இடங்களில் கோலம் போட்டனர். காவலர்கள் சம்பவ இடத்துக்குச் செல்வதற்கு முன்னதாக 7-8 இடங்களில் கோலம் போட்டனர். அப்போது ஒரு வீட்டு வாசலில் ஏற்கெனவே போடப்பட்டிருந்த கோலத்துக்கு அருகில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வாசகங்களை எழுதியுள்ளனர். அந்த வீட்டிலிருந்த 92 வயது முதியவர் அதை எதிர்த்துக் கேள்வி கேட்டுள்ளார். `யாருடைய அனுமதி பெற்று இப்படிச் செய்கிறீர்கள்' என விவாதம் செய்துள்ளார். அதற்கு அவர்கள், `நாங்கள் உங்கள் வாசலில் போடவில்லை, சாலையில்தான் போடுகிறோம்' என எதிர்வாதம் செய்துள்ளனர். இந்தத் தகவல் எங்களுக்குக் கிடைத்த பிறகுதான் நாங்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, அவர்களை அப்புறப்படுத்தினோம். வாக்குவாதம் செய்த வீடியோவும் உள்ளது. (அந்த வீடியோ காட்டப்படுகிறது) கோலம் போட்டவர்கள் கைது செய்யப்படவில்லை. மக்களிடம் தகராறில் ஈடுபட்டதால்தான் அவர்களைக் கலைந்து செல்லுமாறு கூறினோம். ஆனால், அவர்கள் அதைக் கேட்காமல் போலீஸுக்கு எதிராகக் கோஷமிட்டனர். அதன் பிறகுதான் அவர்கள் வேறு இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். கோலம் போட்டதுக்காக யாரும் கைது செய்யப்படவில்லை. பொதுமக்களிடம் பிரச்னை செய்ததால்தான் இந்த விவகாரத்தில் போலீஸ் தலையிட்டது” எனக் கூறியுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு