ஆவணங்களை அழிக்கிறதா அண்ணா பல்கலைக்கழகம்....புதிய அறிவிப்பு சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது

அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 2016-17 விடைத்தாள் மறுமதிப்பீட்டில் லஞ்சம் வாங்கிக்கொண்டு அதிக மதிப்பெண் வழங்கியதாகவும் இதில் கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டதாகவும் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம், அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் உமா உட்பட 10 க்குமேற்பட்ட பேராசிரியர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவந்தது. சீனிவாசலு, புகழேந்தி, செல்வமணி, குலோத்துங்கன் உள்ளிட்ட பல பேராசிரியர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டு இன்னமும் துறைரீதியான விசாரணைகளை எதிர்கொண்டிருக்கும் சூழலில் 2018 ஆம் ஆண்டு விடைத்தாள்களை அழிக்கவேண்டும் என்ற அண்ணா பல்கலைக்கழக கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு (ஏ.சி.ஓ.இ.)அலுவலர் சஞ்சீவியின் அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சி.இ.ஜி. காம்பஸ் எனப்படும் கிண்டி சென்னை பொறியியல் கல்லூரி, குரோம்பேட்டையிலுள்ள எம்.ஐ.டி., ஏ.சி.டெக் எனப்படும் அழகப்பா தொழில்நுட்பக்கல்லூரி, ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்சர் அண்ட் ப்ளேனிங் உள்ளிட்ட நான்கு மையங்களுக்கும் படிக்கும் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கலைகழக ஏ.சி.ஓ.இ(ADDITIONAL CONTROLLER OF EXAMINATIONS)தான் தேர்வு நடத்துகிறது. 2016-17 விடைத்தாள்கள் திருத்துவதில் மோசடி நடந்திருப்பதாக 2019 ஆம் ஆண்டில் விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது 2018 நவம்பர், டிசம்பர் விடைத்தாள்களை அழிக்கவேண்டிய அவசியம்; அவசரம் என்ன? என்கிறவர்கள் அதற்கான பின்னணிக் காரணத்தையும் விவரிக்கிறார்கள். ஒட்டுமொத்த அண்ணா பல்கலைகழகத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலராக (Controller of Examinations) இருப்பவர் வெங்கடேசன். அவரது, மகன் 2019 ஆம் ஆண்டில் குரோம்பேட்டை எம்.ஐ.டியில் பி.இ. படித்தார். இவர், சேரும்போது அப்பா வெங்கடேசன் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக இல்லை, கணித பேராசிரியராகத்தான் இருந்தார். 2019 ஏப்ரலில் தான் இவரது மகன் பி.இ. முடித்தார். வெங்கடேசன் தனது தேர்வு கட்டுப்பாடு அலுவலர் அதிகாரத்தை பயன்படுத்தி மகன் படித்த 62 பாடப்பிரிவுகளில் 29 படப்பிரிவுகளில் ‘ஓ’ கிரேடு வாங்கியுள்ளார். பெரும்பாலும் ஏ+ மற்றும் ஏ கிரேடு வாங்கியுள்ளார். அதாவது, ஓ, ஏ+, ஏ, பி+, பி உள்ளிட்ட கிரேடுகளில் ‘ஓ’ கிரேடுதான் இருப்பதிலேயே ஹையஸ்ட் கிரேடு. அப்படியிருக்க, 29 பாடப்பிரிவுகளில் ‘ஓ’ கிரேடு மதிப்பெண் பெறுவது சாத்தியமே இல்லை” என்றவர்களிடம், “வெங்கடேசன் தேர்வு கட்டுப்பாடு அலுவலராக இருப்பதாலேயே அவரது மகன் அதிக மதிப்பெண் பெறமுடியாது என்று சொல்வது என்ன நியாயம்? அவர், நன்றாக படித்துகூட ‘ஓ’ கிரேடு வாங்கியிருக்கலாமே? என்று நாம் கேட்டபோது, “2015 ஆம் வருடம் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த வெங்கடேசன் மகனின் கட் ஆஃப் மார்க் 196.25 தான். ஆனால், இந்த கட் ஆஃப் மதிப்பெண் கூடுதாக இருக்கலாம். இவர், கவுன்சிலிங் கட் ஆஃப் மதிப்பெண்ணை வைத்து இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேரமுடியவில்லை. அதனால், எம்.ஐ.டி.யில் ஃபவுண்டர் கோட்டா எனப்படும் நிறுவனர்களுக்காக ஒதுக்கப்பட்ட சீட்டில்தான் பி.இ. எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன் படிப்பில் சேர்ந்துள்ளார். காரணம், அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன் படிப்பில் சேரவேண்டும் என்றால் 200-க்கு 200 செண்டமாகவோ, 199.5 கட் ஆஃப் மதிப்பெண் எடுத்திருக்கவேண்டும். அதுவும், எஸ்.சி. பிரிவு மாணவர்களே 197 மதிப்பெண்கள் எடுத்திருக்கவேண்டும். அதனால், தனது பதவியை பயன்படுத்தி மகனுக்கு அதிக மதிப்பெண் கொடுத்துவிட்டார் தேர்வு கட்டுப்பாடு அலுவலர் வெங்கடேசன். அதனால், அவரது மகனின் விடைத்தாள்களை எடுத்துப் பார்த்து ரீ-வேல்யூவேஷன் செய்யவேண்டும் என்றும் சஸ்பெண்ட் ஆகி விசாரணையில் இருக்கும் பேராசிரியர்கள் உட்பட சர்ச்சையை கிளப்புகிறார்கள். இந்தச்சூழலில்தான், தனது கட்டுப்பாட்டில் இருக்கும் ஏ.சி.இ.ஓ. சஞ்சீவி மூலம் அனைத்து விடைத்தாள்களையும் அழிக்கிறார் தேர்வு கட்டுப்பாடு அலுவலர் வெங்கடேசன் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாம், அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் சக்திநாதனைத் தொடர்புகொண்டு, தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடேசனின் மகன் குறித்து உங்களது சங்கம்தான் பதிவாளருக்கு டிசம்பர்-20-ந்தேதி புகார் கடிதம் அனுப்பியதா? என்று நாம் கேட்டபோது, “இதே கேள்வியைத்தான் எங்கள் பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தியும் கேட்டார். நாங்கள், அப்படியொரு புகாரை அனுப்பவே இல்லை என்று சொன்னேன். எங்கள் சங்கத்தின் பெயரைப் பயன்படுத்தி யாரோ அப்படியொரு கடிதத்தை அனுப்பியிருக்கிறார்கள். எங்களுக்கும் அந்த புகார்க் கடிதத்திற்கும் எந்த ஒரு தொடர்புமில்லை” என்று மறுத்தார். குற்றச்சாட்டு குறித்து அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடேசனை தொடர்புகொண்டு நாம் கேட்டபோது, “எனது மகன் உட்பட அத்தனைபேரின் விடைத்தாள்களும் அப்படியேத்தான் இருக்கும். யார் வேண்டுமானாலும் வந்து பார்த்து ஆய்வு செய்துகொள்ளலாம். முறைகேடாக செயல்பட்ட பலர் மீது நான் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளேன். அதனால், எப்படியாவது இந்தப்பதவியிலிருந்து என்னை இறக்கி பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இப்படியெல்லாம் பொய்யான புகார்களையும் வதந்திகளையும் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்” என்றவரிடம், 2016-17 ஆம் வருட விடைத்தாள் மறுமதிப்பீட்டில் மோசடி நடந்ததாக விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது 2018 ஆம் ஆண்டு விடைத்தாள்களை அழிக்கவேண்டிய அவசியம் என்ன? என்று நாம் கேட்டபோது, “இது ஒவ்வொரு வருடமும் வழக்கமாக அனுப்பப்படும் சுற்றறிக்கைதான். சர்ச்சைக்குள்ளானதால் எந்த விடைத்தாளையும் அழிக்கக்கூடாது என்று சொல்லிவிட்டோம்” என்றார் விளக்கமாக. நாம் மேலும் விசாரித்தபோது, “தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடேசனின் மகன் மட்டுமல்ல, அவரது மகளும் நன்றாக படிக்கக்கூடியவர்கள். 200 க்கு 117 கட் ஆஃப் மதிப்பெண் எடுத்த மாணவர்கள் எல்லாம் ஃபவுண்டர் கோட்டாவில் சேர்ந்திருக்கிறார்கள். அப்படியிருக்க, 200 க்கு 196.26 கட் ஆஃப் மதிப்பெண் எடுத்துவிட்டு ஃபவுண்டர் கோட்டாவில் சேர்ந்த மாணவர் 29 பாடப்பிரிவில் ‘ஓ’ கிரேடு வாங்கியிருப்பது வியப்பானதில்லை. ஏற்கனவே, புகாருக்குள்ளான தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் உமா உள்ளிட்ட பேராசிரியர்கள் தரப்புதான் தற்போதைய தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடேசனை பழிவாங்க இப்படியொரு தகவலை பரப்பிவருகிறது”என்கிறார்கள். யார் என்ன பரப்பினாலும் இதுகுறித்த உண்மை ஆராயப்படவேண்டும்!


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு