கர்ப்பிணி மனைவியைக் கொலை செய்த கணவர், மகளின் வாக்குமூலத்தால் சிக்கியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியைச் சேர்ந்தவர்கள் ரவீந்திர குமார் - ஊர்மிளா தம்பதி. இவர்களுக்கு 2011-ம் ஆண்டு திருமணமாகி 11 மற்றும் 7 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ஊர்மிளா மூன்றாவது முறையாகக் கர்ப்பமாகியுள்ளார். கடந்த 4-ம் தேதி, உத்தரப்பிரதேச காவல் எண்ணுக்கு போன் செய்த ரவீந்திர குமார், ஊர்மிளா காணாமல் போனதாகப் புகார் அளித்துள்ளார். ஊர்மிளாவைத் தேடும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், நேற்று முன் தினம் தன் பாட்டி வீட்டுக்குச் சென்ற ஊர்மிளாவின் மூத்த மகள், தாய் காணாமல் போனது பற்றியும் அம்மா - அப்பாவுக்கு இடையேயான சண்டை பற்றியும் கூறியுள்ளார். அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஊர்மிளாவின் குடும்பத்தினர், உடனடியாக மீண்டும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பிறகு, இந்த விவகாரத்தில் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது ரேபரேலி போலீஸ். ஊர்மிளா காணாமல் போகுமுன், இறுதியாக அவருடன் கணவர் ரவீந்திர குமார் தான் இருந்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. பின்னர் அவரிடம் விசாரணை நடத்துவதற்காக அவரைத் தேடி போலீஸார் சென்றபோது, ரவீந்திர குமார் தலைமறைவாகிவிட்டார். அவர்மீது சந்தேகம் வலுத்த நிலையில், ஊர்மிளாவின் சகோதரி மீண்டும் காவல் நிலையத்துக்குச் சென்று தன் சகோதரியை ரவீந்திர குமார் கொலை செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். நீண்ட தேடுதலுக்குப் பிறகு, ஒரு வழியாக ரவீந்திர குமாரைக் கைதுசெய்து காவலர்கள் விசாரணை நடத்தியுள்ளனர்அப்போது அவர் கூறிய விஷயங்கள் பெரும் அதிர்ச்சியாக இருந்துள்ளது. `தனக்கு ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதாகவும், மூன்றாவதாக வயிற்றில் இருக்கும் குழந்தையும் பெண் குழந்தை என மருத்துவமனையில் கூறியதால், பயத்தில் அவரைக் கொலை செய்துவிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், ஊர்மிளாவைக் கொன்று, அவரது உடலை சிறு துண்டுகளாக வெட்டி எரித்துவிட்டதாகவும், மீதமிருந்த சாம்பலை மூட்டைகளில் கட்டி நகரின் பல பகுதிகளில் வீசியதாகவும் தெரிவித்துள்ளார். ரவீந்திர குமாரின் வாக்குமூலத்தின்படி, அவர் ஊர்மிளாவின் சாம்பலை வீசிய இடங்களிலிருந்து அவை சேகரிக்கப்பட்டு தடயவியல் துறைக்கு அனுப்பியுள்ளனர் ரேபரேலி போலீஸார். தன் மூத்த மகள் கண் முன்பாகவே ஊர்மிளாவைக் கொலை செய்துள்ளார் ரவீந்திர குமார். அந்தச் சிறுமி தெரிவித்த விவரங்களை வைத்தே ஊர்மிளாவைக் கொன்றது ரவீந்திர குமார்தான் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலையை ரவீந்திர குமாரின் தந்தை மற்றும் உறவினர்கள் இணைந்து செய்ததாக 11 வயது சிறுமி கூறியுள்ளார்.