நெல்லை கண்ணன் கைது விவகாரத்தில் சுப.வீரபாண்டியன் கேள்வி...

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அண்மையில் திருநெல்வேலியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று பேச்சாளர் நெல்லை கண்ணன் கலந்துகொண்டு பேசினார். அப்போது, மோடி மற்றும் அமித்ஷா குறித்து விமர்சனங்களை முன்வைத்து பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனையடுத்து, பா.ஜ.கவினர் தூண்டுதலின் பேரில் நெல்லை கண்ணன் மீது காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளார்.இந்நிலையில், நேற்று நெல்லை கண்ணனை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரை அருகில் ஹெச்.ராஜா உள்ளிட்ட பா.ஜ.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, பெரம்பலூர் தனியார் விடுதியில் தங்கியிருந்த நெல்லைக் கண்ணனைக் காவல்துறையினர் கைது செய்தனர். காவல்துறையினரின் இந்த நடவடிக்கை தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும், தமிழக அரசு நெல்லை கண்ணனை செய்தற்கு அரசியல் கட்சியினர் மற்றும் ஜனநாயக அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து திராவிடர் இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலைவர் கலைஞரைக் கடுமையாக விமர்சித்தவர், தி.மு.கவிற்கு எதிராகப் பல மேடைகளில் பேசியவர், ஆன்மிகம், பக்தி, சாதிக் கூட்டங்களில் கலந்து கொள்கின்றவர் - இவர்தான் நெல்லை கண்ணன். ஆனாலும், நேற்று இரவு அவரைக் காவல் துறையினர், கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக வண்டியில் ஏற்றியபோது, என் ரத்தம் கொதித்தது.ஏன்? அவர் ஒரு தமிழர். பார்ப்பனர் அல்லாதவர். தமிழ் இலக்கியங்களில் மிகப் பெரும் புலமை வாய்ந்தவர். சிறந்த சிந்தனையாளர். மணிக்கணக்கில் சலிப்பின்றிப் பேசக்கூடிய சொற்பொழிவாளர். இத்தனை தகுதிகள் இருப்பதால், அவர் மோடி, அமித்ஷா பற்றிப் பேசியது நியாயம் என்று நான் கூற வரவில்லை. அது பொறுப்பற்ற பேச்சு! அதுவும் இஸ்லாமியர்கள் மேடையில் அவர் அப்படிப் பேசியிருக்கக் கூடாது என்று நண்பர்கள் சிலர் கூறுகின்றனர். நான் அப்படிக் கருதவில்லை. எந்த மேடையிலும் அப்படிப் பேசக்கூடாது என்பதே சரி. அவரது உரைகள் பலவற்றை நான் நேரிலும், வலையொளி வழியாகவும் கேட்டுள்ளேன். நண்பர்கள் அறிவுமதி, பழனி பாரதி ஆகியோர் அவர் குறித்து வியந்து சொல்வதையும் கேட்டுள்ளேன்.அவர் நாவில் தமிழ் விளையாடும். இலக்கிய மேற்கோள்கள் அருவியெனக் கொட்டும். அத்தனை பயிற்சி! அத்தனை தோய்வு! 'கேட்ட்டார் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப மொழியும் சொல்" அவருடையது! 'தான்' என்கிற பெருமிதம் அவரிடத்தில் உண்டுதான். என்றாலும், தகுதி வாய்ந்த தமிழ் அறிவாளி அவர்!எனினும், நான் உயிராய் நேசிக்கும் தலைவர் கலைஞர் குறித்து அவர் சில நேரங்களில் பேசியுள்ள உரைகள் என்னைச் சினம் கொள்ள வைத்துள்ளன. நான் விரும்பும் தலைவர் ஒருவரை எல்லோரும் விரும்ப வேண்டும் என்ற விதி ஏதும் இல்லை. நானும் அப்படி எதிர்பார்ப்பவன் இல்லை. அனால், உரிய மதிப்புடன்தான் கலைஞர் போன்ற தலைவர்களை விமர்சிக்க வேண்டும் என்று மட்டுமே சொல்ல வருகிறேன். .கலைஞர் எதிர்ப்பு ஒருபுறமிருக்கட்டும். வேறு பல வகையிலும் கூட, அவர்கள் விரும்பும் வகையில் செய்திகளைச் சொல்லக் கூடியவர்தான் அவர். பக்தி இலக்கியங்களை, பக்திச் சுவை நனி செட்டப் சொட்ட விளக்கும் ஆற்றலாளர். பிறகு ஏன் அவரிடம் ஹெச்.ராஜா உள்ளிட்ட பா.ஜ.கவினர் இவ்வளவு வன்மம் காட்டினர்? மோடி, அமித்ஷாவை வசை பாடியதற்காகத்தான் என்று எவரேனும் கருதினால், அவர்கள் சமூக அரசியல் அறியாதவர்கள் என்று பொருள்! சில நாள்களுக்கு முன்பு, ஒரு கூட்டத்தில், பாப்பனர்கள் குறித்து மிகக் கடுமையாகப் பேசினார். 'பார்ப்பன நாய்கள்' என்றே பேசினார். அதுதான் அவர்களை அடங்காச் சின்னத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது! அவர் இவ்வளவு எதிர்ப்புக்கு உள்ளானதற்கு மூன்று காரணங்களே இருக்கக்கூடும். 1. பார்ப்பனர்களைத் திட்டியது 2. காங்கிரஸ் கட்சியில் அவர் இருந்தபோதும், அவருக்கு ஆதரவாகப் பெரும் போராட்டங்கள் வந்து விடாது என்று நம்புவது 3. இனிமேல் பார்ப்பனர்களைப் பற்றி யாரும் பேசக்கூடாது என்று மறைமுகமாக மிரட்டுவது இவ்வளவுதானே தவிர, மோடி, அமித் ஷா குறித்தோ. ஆண்டாள் குறித்தோ எல்லாம் எப்போதும் அவர்கள் பெரிதாகக் கவலை கொள்ள மாட்டார்கள். சரி, காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், அவர் பேசியது தவறுதானே, அதற்குத் தண்டனை வேண்டும்தானே என்று ' நடுநிலைவாதிகள்' சிலர் கூறுவார்கள். இப்படிப் பேசியவர்கள் எல்லோரும் இந்நாட்டில் தண்டிக்கப்பட்டு விட்டார்களா? வேதாந்தி என்று ஒரு வடநாட்டுப் பார்ப்பனர், தலைவர் கலைஞரின் தலையை வெட்டி வா என்று வெளிப்படையாகப் பேசியபோது, அவர் கைது செய்யப்பட்டாரா? கல்லை விட்டு எறிந்தால், மாணவர்களின் விடுதிக்குள் குண்டுகள் வந்து விழுகும் என்று ஹெச்.ராஜா வன்முறையாகப் பேசியதற்காகக் கைது செய்யப்பட்டாரா? ஒரு பெண் ஊடகவியலாளரைக் கீழ்த்தரமாகப் பேசியதற்காக நடிகர் எஸ்.வி.சேகர் இப்போது சிறையிலா இருக்கின்றார். கோயிலுக்குள் அர்ச்சனை செய்ய வந்த ஒரு பெண்ணை கைநீட்டி அடித்த தில்லை திடசிதர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? பார்ப்பனர்களுக்கு ஒரு நீதி, நெல்லை கண்ணன் என்னும் சூத்திரனுக்கு ஒரு நீதியா?. சரி, அவரைக் கைது செய்யக் காவல்துறை வந்தபோது, அவர்களுடன், பா.ஜ.கவின் அடியாட்களும் வந்தது எப்படி? அவர் கைது செய்யப்படுவதகர்க்கு முன்பே, 'ஆபரேஷன் சக்ஸஸ்' என்று ஹெச். ராஜா ட்வீட் செய்தது எப்படி? இனியாவது, தன் நண்பர்கள் யார், பகைவர்கள் யார் என்பதை அறிஞர் நெல்லை கண்ணனும் அறிந்து கொள்வார் என்று நம்புகிறேன். ஆம், "கேட்டினும் உண்டு ஓர் உறுதி!” எனத் தெரிவித்துள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்