டாஸ்மாக் வேண்டாம்’ என்றால் அதை வெளிப்படையாக அறிவிப்பதில் அரசுக்கு என்ன தயக்கம்... - ஐகோர்ட் குட்டு!

கிராம பஞ்சாயத்துகளில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடைபெற்று வந்த மதுபான கடை இடமாற்றம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்து இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசு, மக்கள் நல அரசாக இருக்க வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். அரசியலமைப்பு சட்டப்படி கிராம பஞ்சாயத்துகள் சமூக நலன் மற்றும் பொதுமக்களின் உடல்நலம் தொடர்பான நடவடிக்கை மேற்கொள்வது கடமை என்று தெரிவித்த நீதிபதிகள், ஏன் மாநில அரசு கிராம பஞ்சாயத்துகளை மதிக்கக் கூடாது என கேள்வி எழுப்பினர். ‘டாஸ்மாக் வேண்டாம்’ என்றால் அதை வெளிப்படையாக அறிவிப்பதில் அரசுக்கு என்ன தயக்கம்? - ஐகோர்ட் குட்டு!அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் கடைகளை குறைப்பதாக தெரிவித்துவிட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், டாஸ்மாக் கடைகளில் இலக்கு வைத்து விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து தங்கள் பகுதிக்கு டாஸ்மாக் கடை வேண்டாம் என்று கிராம பஞ்சாயத்துகள் தீர்மானம் நிறைவேற்றினால் அதை செயல்படுத்துவது தொடர்பாக சட்டம் கொண்டு வருவது குறித்து மாநில அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், அரசின் முடிவு குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கவும் உத்தரவிட்டனர். தொடர்ந்து வழக்கு விசாரணை 4 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.