ஊனம் என்ற சொல் தவிர்க்கப்பட வேண்டியதே, தான் ஒரு மாற்றுத்திறனாளி

கோடீஸ்வரி’ஆனார் மதுரை மாற்றுத் திறனாளிப் பெண் கெளசல்யா! ’ ஒரே ஒரு முறையாவது என்னைச் சுற்றியுள்ளவர்கள் பேசுவதை கேட்க வேண்டும்,’ என தன் நீண்டநாள் ஆசையை வெளிப்படுத்திய கோடீஸ்வரியில் வென்ற 31 வயது மாற்றுத் திறனாளிப் பெண். பொதுவாகவே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் விளையாட்டு சம்பந்தமான போட்டிகள் கண் துடைப்பு தான் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. அதிலும் குறிப்பாக பணப்பரிசு வழங்கப்படும் நிகழ்ச்சிகளில் டிஆர்பியைக் கூட்டுவதற்காக முதலில் போட்டியாளர்கள் அதிக பணத்தை வெல்வதைப் போல் காட்டுவார்கள். ஆனால் இறுதியில் எப்படியாவது அந்தப் பணம் போட்டியாளரிடம் இருந்து பிடுங்கப்பட்டு விடும். இதற்கு இடையே அந்த போட்டியாளரின் கஷ்டக்கதையை கண்ணீர் மல்க காட்டி, தங்களது நிகழ்ச்சிக்கு புட்டேஜ் தேற்றி விடுவார்கள். இதனாலேயே ஒரு கட்டத்தில் இது போன்ற நிகழ்ச்சிகள் மீதான நம்பிக்கை மக்களுக்கு குறைந்து விட்டது. ஆனால், இவற்றில் இருந்து விலக்காக திறமையும், அதிர்ஷ்டமும் இருந்தால் நிச்சயம் யாராலும் வெற்றியாளர்கள் உருவாவதைத் தடுக்க முடியாது என நிரூபித்துள்ளார் மதுரையைச் சேர்ந்த 31 வயது கௌசல்யா. கலர்ஸ் சேனலில் ஒளிபரப்பாகும் ’கோடீஸ்வரி’ நிகழ்ச்சியில் 15 கேள்விகளுக்கும் சரியான பதிலைச் சொல்லி நிஜ வாழ்க்கையிலும் கோடீஸ்வரி ஆகி இருக்கிறார். கோடி ரூபாய் செக் வாங்கும் கெளசல்யா கார்த்திகா கௌசல்யாவின் வெற்றி கொண்டாடப்படுவதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. ஆம், அவர் காது கேட்கும் திறனற்ற, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண் ஆவார். இதுவரை எந்தப் போட்டிகளிலுமே கலந்து கொள்ளாத கௌசல்யா, உலகத் தொலைக்காட்சிகளிலேயே முதன்முறையாக கேம் ஷோவில் உட்சபட்ச வெற்றித் தொகையான கோடி ரூபாயை வென்ற மாற்றுத் திறனாளி என்ற சாதனையைப் படைத்துள்ளார். கோடீஸ்வரி : முற்றிலும் பெண்கள் மட்டுமே பங்கேற்கக்கூடிய முதல் ’ஹூ வாண்ட்ஸ் டு பி ஏ மில்லியனர்’ நிகழ்ச்சி தான் ‘கோடீஸ்வரி’. கடந்தாண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதி முதல் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் இந்த கேம் ஷோவை நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கி வருகிறார். இது போன்ற நிகழ்ச்சிகளில் மெத்தப் படித்த அதிமேதாவிகள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்ற பிம்பத்தை உடைத்து, சமூகத்தால் ஒதுக்கப்பட்ட பெண்கள், குடும்பத்தை தனி ஒருத்திகளாய் தாங்கும் இல்லத்தரசிகள், பள்ளி செல்லும் வயதில் குடும்ப பாரத்தை சுமக்கும் சிறுமிகள், மாணவிகள், மாற்றுத்திறனாளி பெண்கள் எனப் பலதரப்பு பெண்கள் தங்களது திறமையை நிரூபித்து வருகின்றனர். அந்தவகையில் நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் தான் கௌசல்யா கார்த்திகா. சுத்தமாக காது கேட்கும் திறன் அற்ற, பேசவும் இயலாத மாற்றுத்திறனாளி பெண்ணான கௌசல்யா, பாஸ்டஸ்ட் பிங்கருக்காக ராதிகா கேட்ட கேள்விக்கு 5.37 வினாடிகளில் மின்னல்போலப் பதிலளித்து ஹாட் சீட்டில் அமரும் வாய்ப்பைப் பெற்றார். அதிர்வுகள் மற்றும் வாய் அசைவின் மூலமே, மற்றவர் கூறும் விஷயங்களை அறிந்து செயல்படும் கௌசல்யா, தன்னைப் பற்றிய அறிமுகத்திலேயே பார்வையாளர்களை அசர வைத்தார். ஊனம் என்ற சொல் தவிர்க்கப்பட வேண்டியதே, தான் ஒரு மாற்றுத்திறனாளி என்பதை தன் சைகைகள் மூலம் நிரூபித்தார். பி.எஸ்சி பேஷன் டெக்னாலஜி, எம்.எஸ்சி ஐடி மற்றும் எம்பிஏ படித்துள்ள கௌசல்யா, இன்று மதுரை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளர் பணி புரிந்து வருகிறார். அனுதாபங்களை விரும்பாத கௌசல்யா, ஒவ்வொரு கேள்விகளுக்கும் தன் கையில் உள்ள ஆப்ஷனுக்கான அட்டைகளைக் காட்டி, லாவகமாய் பதிலளித்து தற்போது நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தை எட்டி உலகத்தையே பரபரப்பாக்கியுள்ளார். ஆனால் அதற்குள்ளாகவே அவரது வெற்றிச் செய்தி சமூகவலைதளங்களில் வைரலாகி விட்டது. தான் பேசுவது மற்றவர்களுக்குப் புரியவில்லை என்ற போதும், கஷ்டப்பட்டாவது தன் காதல் கணவரை மாமா என அழைத்து மக்களை ஆச்சர்யப்படுத்தினார் கௌசல்யா. காது கேட்கவில்லை என்ற போதும், தன் குழந்தையின் மழலை மொழியை எப்படியாவது கேட்டு விட வேண்டும் என்ற ஆசையோடு தான் அந்த ஹாட் சீட்டில் அமர்ந்தார் அந்தத் தாய். கௌசல்யா ஒவ்வொரு கேள்விகளுக்கும் சரியான பதிலைச் சொல்லி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த போதும், பார்வையாளர்கள் தாங்களே வெற்றி பெற்றது போல் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்ததைப் பார்க்க முடிந்தது. 15 கேள்விகளுக்கும் சரியான பதிலைச் சொல்லி, உலகத்திலேயே ’கோடீஸ்வரி’ நிகழ்ச்சியில் கோடி ரூபாய் வென்ற முதல் மாற்றுத்திறனாளி என்ற பெருமையை அடைந்துள்ளார் கௌசல்யா. அதோடு, தமிழ் நிகழ்ச்சியின் முதல் கோடீஸ்வரி என்ற சிறப்பும் அவருக்குக் கிடைத்துள்ளது. குறைகளைக் கடந்து தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்று நிரூபிப்பதற்காகவே கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகக் கூறுகிறார் கௌசல்யா. தற்போது 1 கோடி ரூபாய் வென்றது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள அவருக்கு, குரூப் 1 தேர்வு எழுதி உதவி ஆட்சியராக வேண்டும் என்பது தான் ஆசையாம். மேலும், தான் பரிசாக பெற்ற பணத்தில், நாகையில் உள்ள வாய் பேச முடியாத, காது கேளாத பள்ளிக்கு உதவ திட்டமிட்டுள்ளார் கௌசல்யா. தன் நீண்டநாள் கனவான சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா செல்ல வேண்டும், சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என கௌசல்யாவின் ஆசைகள் பட்டியலாக நீள்கிறது. நிகழ்ச்சியின் போது ராதிகா அவரிடம், ‘உங்களுக்கு நீண்ட கால ஆசை என எதாவது இருக்கிறதா? இந்த பணத்தை வென்றால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, “பணத்தைத் தாண்டி எனக்கு ஒரே ஒரு ஆசை தான். ஒரு முறையாவது என்னைச் சுற்றியுள்ளவர்கள் பேசுவதை நான் கேட்கவேண்டும். ஆனால் அது நடக்குமா என்று தெரியவில்லை... என்று சோகத்தை உள்ளே அடக்கியவாறு சிரித்துக் கொண்டே பதில் சொன்னது அங்கிருந்த அனைவர் கண்களையும் குளமாக்கியது உண்மையே.” கௌசல்யாவின் வெற்றி குறித்து கோடீஸ்வரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ராதிகா சரத்குமார் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ‘இந்நிகழ்ச்சி பெண்களின் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றும் ஒரு தளமாக இருப்பதாகவும், இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும்’ அவர் கூறியுள்ளார் . “கோடீஸ்வரி நிகழ்ச்சியில் படித்தவர்களை விட, படிக்காதவர்கள் தான் தைரியமாக பதிலளிக்கின்றனர். கவுசல்யாவின் வெற்றி, பலருக்கும் உதாரணமாக இருக்கும். கடைசி வரை, உறுதியோடு, தைரியமாக விளையாடினார். நிறைய பேரின் வாழ்க்கை மாற்றத்திற்கும், சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றவும், இந்நிகழ்ச்சி பயன்படுவது, மகிழ்ச்சியாக உள்ளது,” என்கிறார் ராதிகா சரத்குமார். மேலும், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் வர்த்தகப் பிரிவுத் தலைவர் அனுப் சந்திரசேகரன் இது குறித்து கூறுகையில், ‘கௌசல்யாவின் இந்த வெற்றி பெண்கள் அனைவருக்கும் பெருமையான தருணம். கௌசல்யா, 1 கோடி ரூபாய் வென்றிருப்பது பெண்களுக்கான ஈடுபாடு, திறமை போன்றவற்றை மேலும் ஊக்குவிக்கும்’ எனத் தெரிவித்துள்ளார். ‘கோடீஸ்வரி’ கௌசல்யாவிற்கு உலகம் முழுவதும் இருந்து சமூகவலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்