‘முரசொலி’ குறித்து பேச்சு: ரஜினிகாந்தை கடுமையாக விமர்சிக்கும் திமுகவினர்

‘முரசொலி' நாளிதழ் வைத்திருந்தால் திமுககாரர். ‘துக்ளக்' வார இதழ் வைத்திருந்தால் அறிவாளி என்று பேசிய நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக கொந்தளித்துள்ள திமுகவினர், அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கடந்த 14-ம் தேதி சென்னையில் நடந்த ‘துக்ளக்' வார இதழின் பொன் விழாவில் பேசிய ரஜினிகாந்த், ‘‘பத்திரிகையாளர்கள் பொய்யை கலக்காமல் உண்மையை எழுத வேண்டும். 1971-ல் சேலத்தில் பெரியார் நடத்திய ஊர்வலத்தில் ராமச்சந்திர மூர்த்தியின் படத்துக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது. இதை எந்த பத்திரிகையும் வெளியிடாத நிலையில் ‘துக்ளக்'கில் சோ துணிவுடன் வெளியிட்டார். யாராவது ‘முரசொலி' வைத்திருந்தால் திமுககாரர் என்று சொல்லிவிடலாம். ‘துக்ளக்' வைத்திருந்தால் கட்டாயம் அவரை அறிவாளி என்று சொல்லிவிடலாம்" என்றார். ரஜினியின் இந்தப் பேச்சுக்கு திமுகவினரும், அவர்களது ஆதரவாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமூக ஊடகங்களில் ரஜினியை கடுமையாக விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக தனது முகநூல்பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ‘முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரியலெட்சுமினா அம்மா - கால்நூற்றாண்டாக கால்பிடித்து காலம்கடத்தி ‘தலைசுத்திருச்சு’ என நிற்கும்காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுககாரன். நான் திமுககாரன். பொங்கல் வாழ்த்துகள்’ என பதிவிட்டுள்ளார். மற்றொரு பதிவில், ‘முரசொலி' தமிழினத்தின் தன்மானத்தை உயர்த்திய முதுகெலும்பு. கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கு அரசியல் பாடம் நடத்திய கழகத்தின் அறிவாயுதம். இது, என்றும் எளியோரின் குரலாய் ஒலித்துக்கொண்டே இருக்கும்’ என்று ரஜினியின் கருத்துக்கு பதிலளித்துள்ளார். ‘‘ரஜினி கூறியதில் ஒரு திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. ‘முரசொலி' வைத்திருந்தால் அவர் திமுககாரர். ‘துக்ளக்' வைத்திருந்தால் அவர் பிராமணர்" என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். ‘1971-ம் ஆண்டு சேலத்தில் பெரியார் நடத்திய ஊர்வலத்தில் ராமரின் படத்துக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதாக ‘துக்ளக்’ பொன் விழாவில் ரஜினி பேசியது தவறானது. அந்த ஊர்வலத்துக்கு எதிராகத்தான் செருப்புகள் வீசப்பட்டன. வரலாற்றை திரித்து ரஜினி பேசியுள்ளார்’ என்று திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)