ஈரான் கண்டிப்பாக கைவிட வேண்டும்: ட்ரம்ப்

ஈரானின் ராணுவ தளபதியான சுலைமானியை ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே அமெரிக்க படை கொடூரமாக கொன்றது. இதனால் அமெரிக்கா - ஈரான் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. சுலைமானியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட சில மணி நேரங்களில், ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது ஈரான். இதில் 80 வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், ஈரான் நடத்திய தாக்குலில் அமெரிக்காவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், வீரர்கள் அனைவரும் நலமுடன் உள்ளதாகவும் தெரிவித்தார். ராணுவ தளம் மட்டும் சிறிய அளவில் சேதம் அடைந்ததாக குறிப்பிட்ட ட்ரம்ப், அமெரிக்காவை மிரட்டுவதை ஈரான் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் எச்சரித்தார். Trump அணு ஆயுத கனவை ஈரான் கண்டிப்பாக கைவிட வேண்டும் என தெரிவித்த ட்ரம்ப், ஈரானின் அத்துமீறல்களை அமெரிக்கா ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என்றார். ஈரான் மீது மீண்டும் ராணுவ நடவடிக்கைகளை தொடர வேண்டிய அவசியமில்லை என்றும், அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் எனவும் கூறினார். அதிகளவு கச்சா எண்ணெயை தாங்கள் உற்பத்தி செய்வதாக குறிப்பிட்ட ட்ரம்ப், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் தங்களுக்கு தேவையில்லை எனவும் கூறினார். மேலும், உலக நாடுகள் ஈரானை தனிமைப்படுத்த வேண்டும் எனவும் ட்ரம்ப் கேட்டுக் கொண்டார்.