சென்னை மாநகராட்சியில் 93.5 சதவீத குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

சென்னையில் 6 லட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டது. தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்கள் மூலம் சொட்டு மருந்து வழங்கப்பட்டது. 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் 93.5 சதவீத குழந்தைகளுக்கு, அதாவது, 6 லட்சத்து 98 ஆயிரத்து 347 குழந்தைகளில், 6 லட்சத்து 52 ஆயிரத்து 962 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.