அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு

நடப்பு ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி மதுரையை அடுத்த அவனியாபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் சீறிப்பாய்ந்த காளைகளை, காளையர்கள் அடக்கி பரிசுகளை தட்டிச் சென்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் பாரம்பரியமான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மதுரை அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது. அவனியாபுரத்தில் காலை 8 மணிக்கு போட்டி தொடங்கியது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம், மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவ ஆசிர்வாதம், மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் ஆகியோரைக் கொண்ட ஜல்லிக்கட்டு குழு போட்டியை தொடங்கி வைத்தது. போட்டியில் பங்கேற்க 730 வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அவர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் வினய் தலைமையில் உறுதி மொழி ஏற்றனர். போட்டியில் கலந்து கொள்ள 700 காளைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. வீரர்கள் உறுதி மொழி ஏற்றதை தொடர்ந்து காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலை கடந்து சீறிப் பாய்ந்த காளைகளை அடக்க, வீரர்கள் தங்களின் வீரத்தை வெளிப்படுத்தினர். சில நேரங்களில் காளைகள் வீரர்களிடம் பிடிபட்டன. சில நேரங்களில் காளையர்களை தூக்கி வீசி காளைகளும் பந்தாடின. சில காளைகள் யாருக்கும் அடங்காமல் களத்தில் நின்று விளையாடின. ஜல்லிக்கட்டை பலரும் கண்டு களிக்க வசதியாக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே எல்.இ.டி. டி.வி.க்களும் அமைக்கப்பட்டிருந்தன. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 14 காளைகளை பிடித்த மதுரை ஜெய்கிந்த்புரத்தைச் சேர்ந்த விஜய் சிறந்த வீர ராக தேர்வு பெற்று முதல் பரிசு பெற்றார். 13 காளைகளை பிடித்த விளாங்குடி பரத் இரண்டாவது பரிசை வென்றார். இந்த போட்டியில் பங்கேற்ற புதுக்கோட்டையைச் சேர்ந்த அனுராதா என்பவரின் காளையான ராவணன், பெயருக்கு ஏற்ப களத்தில் அனைவரையும் மிரள வைத்தது. வாடி வாசலில் இருந்து துள்ளி பாய்ந்த ராவணனை தொடும் துணிச்சல் எந்த வீர ருக்கும் வரவே இல்லை. இதனால் வீரக்காளைக்கு உரிய முதல் பரிசை காளை ராவணன் வென்றது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)