நோ என்.ஆர்.சி' டீ-ஷர்ட்டுடன் வந்த தமிமுன் அன்சாரி

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம்  தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் இது என்பதால், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உரையுடன், கூட்டம் தொடங்கப்பட்டது. அப்போது, குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தார் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினரான, தமிமுன் அன்சாரி. அவர் அணிந்திருந்த கறுப்பு டீ ஷர்சட்டில் `நோ என்.ஆர்.சி, சி.ஏ.ஏ, என்.பி.ஆர்' என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும் கையில் தேசியக்கொடியேந்தி ஜனநாயக முறைப்படி எதிர்ப்புகளைப் பதிவுசெய்தார். மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரியிடம் பேசினோம். ``மத்திய அரசு கொண்டுவந்துள்ள என்.ஆர்.சி, சி.ஏ.ஏ, என்.பி.ஆர் சட்டங்களைத் திரும்பப்பெறவேண்டும் என்று நாடு முழுவதும் போராட்டம் கடுமையாக வலுத்து வருகிறது. இந்தக் கறுப்புச் சட்டத்தைத் தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என்பதற்காகத்தான் இந்தப் போராட்டம். எங்களது கோபம் மத்திய அரசு மீதுதான். மத்திய அரசின் பிரதிநிதியாக இருப்பவர்தான் ஆளுநர். அவர் சட்டப்பேரவையில் உரையாற்றுகின்ற போது அவரது உரையைப் புறக்கணிப்பதன் மூலமாக எங்களது எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறோம். எனது முதுகில் நேதாஜி, காந்தி ஜி-யின் புகைப்படத்தோடு, நோ என்.ஆர்,சி. நோ சி.ஐ.ஏ என்கிற வாசகங்கள் கொண்ட டீ ஷர்ட் அணிந்துகொண்டு சட்டப்பேரவையில் நுழைந்தேன். தமிழகத்தில் இந்தச் சட்டங்களை அமல்படுத்தக்கூடாது என்பதற்காக ஜனநாயக முறைப்படி எதிர்ப்புகளைப் பதிவு செய்தேன். இந்தச் சட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தினோம். மத்திய அரசின் மீதுதான் எங்களது கோபம். தமிழகத்திலும் பெரும்பான்மை அரசியல் கட்சிகளும், அமைப்புகளும், ஜனநாயக சக்திகளும் இந்தச் சட்டத்திற்கு எதிராகத்தான் இருக்கின்றன. மேற்கு வங்கம், பீகார், பஞ்சாப், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் இந்தச் சட்டங்களை தங்கள் மாநிலங்களில் அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன. கேரளா, இந்தச் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானமே போட்டுள்ளது. இப்படி இருக்கையில் இந்தச் சட்டங்களுக்கு எதிராகத் தமிழக அரசு மௌனம் காப்பது ஏன் என்று தெரியவில்லை. அதற்கு எதிர்ப்பு தெரிவித்துத்தான் ஜனநாயகபூர்வமாக எனது எதிர்ப்பைத் தெரிவித்து, பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் சி.ஏ.ஏ.வுக்கும் என்.ஆர்.சி.க்கும் எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர். அவருக்கு எதிரான செயல்களில் எடப்பாடி அரசு செயல்படவேண்டாம். அதைப் புரிந்துகொண்டு நடந்துகொள்ளுங்கள். நான் சட்டமன்றத்தில் இப்படி நடந்துகொண்டதற்காக என்மீது வழக்கு தொடர்ந்தாலும் அதைச் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்" என்று முடித்துக்கொண்டார். 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்தார் தமிமுன் அன்சாரி. அ.தி.மு.கவின் சின்னத்திலேயே போட்டியிட்டு எம்.எல்.ஏ பதவியைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்