“பெண் ஆணிற்குச் சமமானவள்” என்ற உரிமையைச் சட்டமும், சமூகமும் தந்துள்ளன.

வாழ்க்கை என்பது ஆண் பெண் என்ற இருபாலருக்கும் சமமானது. அந்த வாழ்வில் இன்று, இருவருக்கும் உரிய உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. பல போராட்டத்திற்குப் பின்பு “பெண் ஆணிற்குச் சமமானவள்” என்ற உரிமையைச் சட்டமும், சமூகமும் தந்துள்ளன. பெண் அடிமைப்பட்டவள் அல்ல என்பதை பல பெண்ணியவாதிகள் நிரூபித்துள்ளனர். உலகம் முழுவதும் இந்நிலை மாறி தற்போது பல நிலைகளில் பெண்களுக்கு உரிமைகள் கிடைத்துள்ளன. சட்டரீதியாகப் பெண்கள் அவ்வுரிமையைப் பெற்றுள்ளனர். இருப்பினும், இன்றைய சூழலில் பெண்ணுரிமை என்பது என்ன? அவ்வுரிமையை எவ்வாறு கையாளுதல் வேண்டும் என்ற விழிப்புணர்வைப் பெண்கள் பெறவேண்டும். பெண்ணுரிமை என்பது பெண்களின் எல்லாச் சிக்கல்களையும் புரிந்து கொண்டு தீர்ப்பதாகும். இதனைப் பெண்ணியம் என்பர். இக்காலக் கட்டத்தில் பெண்களுக்குப் பல வகையான சுதந்திரமும் உரிமையும் கிடைத்துள்ளன. பெண்கள் அவ்வுரிமையை எவ்வாறு புரிந்து கொண்டனர் என்பதில் சிக்கல்கள் உள்ளன. உலகம் முழுவதும் பெண் அடிமைப்படுத்தப்பட்டாள். பின்பு, தனிமனித சுதந்திரத்திற்காக மனிதன் போராடிய போது தான் பெண்களுக்கும் சில அடிப்படை உரிமைகள் உள்ளன என்பது குறித்த விழிப்புணர்வு வளர ஆரம்பித்தது. அதன் மூலம் தான் பெண்களின் சிக்கல்களுக்குத் தீர்வுகளான பெண்ணிய அமைப்புகள் உருவாயின. அவ்விழிப்புணர்வு மூலம் பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டுச் சமுதாயத்தில் பெண்ணின் நிலை உயர வழிவகை செய்தது. எனினும் பெண்கள் அவ்வுரிமையை எவ்வாறு புரிந்து கொண்டனர் என்பதைச் சிந்தித்தல் வேண்டும். கல்வியில் உரிமை பெற்ற பெண்கள், பல துறைகளிலும் முன்னேற்றம் கண்டனர். சமுதாயத்தில் வீரமாகவும் துணிச்சலோடும் வலம் வருகின்றனர். பல்வேறு துறைகளை நிர்வகிக்கும் திறமை கொண்டுள்ளனர். சமுதாயத்தில் பெண் சக்தி இன்னதென உணரவைத்தனர். எனினும் பெண்ணுரிமை என்பது என்ன? அதனை எங்ஙனம் கையாளுதல்வேண்டும்? என்பதைப் பார்க்கும் போது சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொரு நாட்டிற்கும், இனம், மொழி, பழக்க வழக்கம், பண்பாடு ஆகியவற்றில் தனித்துவம் உள்ளது. அவை அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை உணரவேண்டும். ஆணோ பெண்ணோ சட்டத்திற்கும் சமுதாயத்திற்கும் உட்பட்டே தனது சுதந்திரத்தை உரிமையைப் பயன்படுத்த முடியும். ‘உரிமை’ என்பது வரையறைக்கு உட்பட்டதல்ல என்றாலும், சில வரைமுறைகளைக் கடைபிடித்தல் மூலம் தான் சமுதாயம் வளம்பெறும். எனவே சில வரைமுறைகளோடு கூடிய உரிமை என்பது தான் ஆரோக்கியமானதாக அமையும். நாட்டில் “பேச்சுரிமை உண்டு” என்பதற்காக எதை வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பேசிவிட முடியாது என்பது போல, பெண்ணிற்கு உரிமை உண்டு என்பதற்காக அவள் எதை வேண்டுமானாலும் செய்தல் என்பது சரியல்ல. சமூகத்தில் இன்று பல பெண்கள் வெளிநாகரிகத்தில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. படிக்கும் சிறுமியர் மது அருந்துகின்றனர் என்பதைப் பார்க்கும் போது நெஞ்சம் பதறுகிறது. பெற்றோர்கள் பெண்களுக்குச் சிறுவயது முதலே தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளையும், பழக்க வழக்கங்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும். சிறுமியராக இருந்தாலும் உடையில் கவனம் செலுத்துதல் வேண்டும். குழந்தை என்றாலும் கூட நாகரிகமாக உடை அணிதலே நலம். மேலும், ஆண், பெண் நட்புக்குறித்த புரிதல், பெண்ணின் வலிமை, ஆற்றல் ஆகியவற்றை உணரச் செய்யவேண்டும். அதே நேரத்தில் பெண் இச்சமுதாயத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தவள்? என்பதையும் அவள் எவ்வாறு நடந்து கொள்ளுதல் வேண்டும்? என்பதையும் கற்றுக் கொடுத்தல் வேண்டும். முக்கியமாகப் பெண்கள் “ஆண் செய்யும் செயல்களைச் செய்வதே தனது உரிமை” என்ற தவறான எண்ணத்தைக் கொண்டுள்ளனர். உதாரணமாக ஆண் அணியும் ஜீன்ஸ், டீசர்ட் அணிவது உயர்வு என்று கருதினால் பெண் அணியும் சேலையும், சுடிதாரும் தாழ்வானதா? சிந்தியுங்கள்! அதாவது ‘நான் பெண்’ என் உடை ஆணின் உடையை விட உயர்வானது, சிறந்தது என்ற எண்ணத்தில் தான் பெண்ணின் உயர்வு உள்ளது. அடுத்த பாலினம் அணியும் உடை யில் விருப்பம் கொள்வது என்பது அந்தப் பாலினத்தை உயர்வாக எண்ணுதல் என்பதே பொருள். அப்படியானால் ஆண் செய்யும் பல பழக்கங்களை பெண்களும் செய்தலே உயர்வு, உரிமை என எண்ணுதல், ‘பெண்’ தனக்குத்தானே தாழ்வானவளாகக் கருதுகிறாள் என்பதே பொருள். எனவே, பெண்களே ஆண்களுக்கும் மது அருந்துதல் போன்றவை தீயபழக் கங்கள் தான். அதுபோன்ற பழக்க வழக்கங்களைத் தானும் செய்தலே உயர்வு, உரிமை என்ற எண்ணம் சிறந்ததல்ல. பெண் அவளுக்குரிய இயல்புகளோடு இருந்து ஆளுமைப்பண்பு கொண்டு விளங்குதலே பெண் உயர்வடைவதற்கு வழியாகும். மேலும் இயற்கையில் உள்ள எல்லாப் பொருள்களுக்கும் ஒரு தன்மை உண்டு. அவை அவற்றின் “இயல்புகளில் மாறுபட்டால் உலகம் அழியும்”. அதுபோல நம்நாட்டின் பண்பாடு பழக்கவழக்கம் ஆகியவற்றின் இயல்பு மாறாமல் காப்பது பெண்களின் கடமையாகும். எனவே, பெண்களுக்கு முழுசுதந்திரமும் உரிமையும் வேண்டும் என்ற கருத்தில் மாற்றமில்லை. அதேநேரத்தில் ஒரு நாட்டின் முகவரியாகத் திகழும் நாகரிகத்தையும் பண்பாட்டையும் காக்கும் கடமை பெண்களுக்கும் உண்டு என்பதை உணர்ந்து வாழ்வதே பெண்ணியத்தின் சிறப்பாகும்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்