ஐ.டி. பணியை விடுத்து இயற்கை விவசாயம் செய்யும் பெண்: ஊராட்சி தலைவர்

திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாண்டேஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரேகா ராமு(37). இவர், மாதம் ஒரு லட்சம் ரூபாய் ஊதியம் ஈட்டிவந்த தகவல் தொழில்நுட்பத் துறை பணியை உதறிவிட்டு, இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு தீவிரமாக செயல்படுவது மட்டுமின்றி பாண்டேஸ்வரம் ஊராட்சித் தலைவராகி மக்கள் பணியாற்றவும் தொடங்கியுள்ளார். இதுகுறித்து, ரேகா ராமு நம்மிடம் பகிர்ந்துகொண்ட அனுபவங்கள்: Powered by Ad.Plus சென்னை, தி.நகரில் வசித்து வரும் எங்கள் குடும்பத்தின் பூர்வீகம் காஞ்சிபுரம் மாவட்டம், புத்திரன்கோட்டை கிராமம். பி.காம்., எம்.பி.ஏ. படித்து முடித்த கையோடு தகவல் தொழில்நுட்பத் துறையில் பணி கிடைத்தது. கடந்த 2008-ம் ஆண்டில் பாண்டேஸ்வரத்தைச் சேர்ந்த பார்த்தசாரதியை மணந்தேன். என் கணவரும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்து வந்தார். விவசாய குடும்பங்களைச் சேர்ந்த நாங்கள் விவசாயத்துக்கு தொடர்பில்லாமல் வாழ்ந்துவந்தோம். ரசாயன உரமே காரணம் அப்போது, பல்வேறு உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டோம். ரசாயன உரங்கள் மூலம் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களை சாப்பிடுவதே இதற்கு காரணம் என்பதை உணர்ந்தோம். ஆகவே, நாங்கள் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு, இயற்கையோடு இணைந்து வாழ முடிவு செய்தோம். அதன்படி, மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் ஊதியம் பெற்றுவந்த என் கணவரும், மாதம் ஒரு லட்சம் ரூபாய் ஊதியம் ஈட்டிவந்த நானும் எங்கள் பணிகளை உதறிவிட்டு, கடந்த 5 ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறோம். முதலில், கீரை வகைகளை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் இல்லாமல் இயற்கை விவசாய முறையில் பயிரிட்டோம். பிறகு, பாரம்பரிய நெல் வகைகளையும் பயிரிட்டு வருகிறோம். அதிகாரம் தேவை இந்நிலையில், இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்ந்த பாண்டேஸ்வரம் கிராம மக்களின் வாழ்க்கை முறை கொஞ்ச கொஞ்சமாக மாறி வருவது தெரிந்தது. ஏரியில் மண் திருட்டு, பெருகி வரும் செங்கல் சூளைகள் உள்ளிட்ட காரணங்களால் பாண்டேஸ்வரம் பகுதியில் விவசாயத்தை தொடர முடியாமல் போகும் அபாயம் உள்ளது. அதே நேரத்தில், பாண்டேஸ்வரம் அரசு பள்ளியை மேம்படுத்துவது உள்ளிட்ட ஆக்கப்பூர்வ பணிகளை தன்னார்வலர்களாக இருந்து செய்யக்கூட ஊராட்சித் தலைவரின் அனுமதி தேவையாக உள்ளது. ஆனால், பொறுப்பில் இருப்பவர்கள் தாங்கள் தேர்தலின் போது செலவழித்த பணத்தை திரும்ப எடுக்கும் மனநிலையிலேயே உள்ளனர். எனவே, அதிகாரம் நம் கையில் இருந்தால், மக்கள் நலப் பணிகளை எளிதாக செய்யலாம் என்பதற்காக பாண்டேஸ்வரம் ஊராட்சி தலைவர் வேட்பாளராக போட்டியிட்டேன். என் கணவரின் தாத்தா, அப்பா உள்ளிட்டவர்களுக்கு இருக்கும் நீண்டகால அரசியல் அனுபவம், ஊராட்சியில் அரசுப் பள்ளி உள்ளிட்டவற்றுக்கு நிலம் வழங்கியது போன்ற காரணங்களால் மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு, ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 3 முறை சென்று எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவரித்தது ஆகியவற்றால் எனக்கு ஊராட்சி தலைவராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல்கட்ட பணிகள் பொதுமக்கள் மத்தியில் ஊட்டச்சத்தின் அவசியத்தை வலியுறுத்தி பாண்டேஸ்வரத்தை ஊட்டச்சத்து குறைபாடு இல்லா ஊராட்சியாக மாற்றுவது, கிராமம் சார்ந்த வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, தெருவிளக்குகள், தடையில்லா குடிநீர், பஸ் வசதியை ஏற்படுத்துவது உள்ளிட்டவை எனது முதல் கட்டப் பணியாகும். இவ்வாறு ரேகா ராமு தெரிவித்தார்.