புதிய தனியார் மருத்துவமனைகள்!’-பொதுப்பட்டியலுக்கு மாற்றப்படுகிறதா சுகாதாரத் துறை..

மாநிலப்பட்டியலில் இருக்கும் சுகாதாரத் துறையை பொதுப்பட்டியலுக்கு மாற்றம் செய்துவிட்டு, நாடு முழுவதும் 5,000 தனியார் மருத்துவமனைகளை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் திறக்கலாம் என்று சுகாதாரத் துறையின் உயர் நிலைக் குழு மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது. 15-வது நிதி ஆணையத்தின் சார்பில் நியமிக்கப்பட்ட இந்தக் குழு 120 பக்க அளவிலான அறிக்கையை அண்மையில் மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது அந்தக் குழுவின் அறிக்கையின்படி, மாநிலப் பட்டியலில் இருக்கும் சுகாதாரத் துறையை பொதுப்பட்டியலுக்கு மாற்றிவிட்டு, அனைவருக்கும் சிகிச்சை கிடைக்கும் உரிமை நிலைநாட்டப்படும். அந்த வகையில் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 200 படுக்கை வசதிகள் கொண்ட 3,000 முதல் 5,000 சிறிய தனியார் மருத்துவமனைகளை நாடு முழுவதும் தொடங்கலாம். மேலும் 2025-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் இருக்கும் எம்.பி.பி.எஸ் இடங்கள் மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் அனைத்தும் சமன் செய்யப்படும் என்று பரிந்துரைத்துள்ளது. சுகாதாரத் துறை பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டால், மாநில அரசின் உரிமைகள் ஒடுக்கப்பட்டு, மத்திய அரசுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும்.இது தொடர்பாகப் பேசியுள்ள உயர்நிலைக் குழு உறுப்பினர்கள், ``நிதி ஆயோக் அதிகாரிகள், சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் அரசின் கொள்கை நிபுணர்கள் ஆகியோரிடம் நடத்தப்பட்ட நீண்ட கலந்துரையாடல்களுக்குப் பிறகே இந்தப் பரிந்துரைகள் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன'' என்று தெரிவித்துள்ளனர். உயர்நிலைக் குழுவின் இந்தப் பரிந்துரை பொது சுகாதார நிபுணர்களின் கடும் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. ``நிதி ஆணையம் நியமித்த உயர்நிலைக் குழுவில் இரண்டு நபர் கார்ப்பரேட் மருத்துவனையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், சுகாதாரத் துறை தனியார் மயமாவதற்கு ஆதரவு தெரிவித்திருப்பார்கள். இந்தக் குழுவின் பரிந்துரைகள் அனைத்தும் ஏற்கெனவே திட்டமிடப்பட்டவை" என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.