குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்தது எப்படி...

குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முறைகேடு எப்படி நடந்தது என்பது குறித்து சிபிசிஐடி பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது.


குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை, இடைத்தரகர்கள் மற்றும் முறைகேடாக தேர்வு எழுதியவர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது. வழக்கில் கைது செய்யப்பட்ட டி.என்.பி.எஸ்.சி பணியாளர் ஓம்காந்தன் மற்றும் டி.பி.ஐ பணியாளர் பழனி ஆகியோரிடம் நடைபெற்ற விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஓம்காந்தனின் வீட்டை சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை செய்ததில் 2 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன.


கடந்த 2018ஆம் ஆண்டு, இடைத்தரகர் பழனி மூலம் ஓம்காந்தனுக்கு ஜெயகுமார் என்பவர் அறிமுகமாகியுள்ளார். 2019ஆம் ஆண்டு குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியான பிறகு, முறைகேடு தொடர்பாக ஜெயகுமார் ஓம்காந்தனிடம் உதவிக் கேட்டுள்ளார். அதற்காக 15 லட்சம் ரூபாய் தருவதாக ஆசை வார்த்தை கூறி முன்பணமாக 2 லட்சம் ரூபாயை ஜெயகுமார் ஓம்காந்தனுக்கு கொடுத்துள்ளார். மேலும், கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் தேர்வு மையங்களுக்கான பணியை தேர்வு செய்யுமாறு ஓம்காந்தனிடம் ஜெயகுமார் கூறியுள்ளார்.


இதனையடுத்து, எளிதில் மை அழிக்கூடிய பேனாக்களை ஜெயகுமாருக்கு ஓம்காந்தன் வழங்கியுள்ளார். தேர்வு முடிந்தபிறகு, கடந்த ஆண்டு செப்டம்பர் 1ந் தேதி விடைத்தாள்கள் ராமநாதபுரம் கருவூலத்திற்கு சென்னைக்கு வாகனம் மூலம் கொண்டு செல்லும் போது, சிவகங்கையில் சாப்பிடுவதற்காக வாகனத்தை நிறுத்தி, டி.என்.பி.எஸ்.சி பணியாளர்களுக்கு தெரியாமல் ஓம்காந்தன் உதவியுடன் கீழ்க்கரை மற்றும் ராமேஸ்வரம் விடைத்தாள்களை மட்டும் ஜெயகுமார் எடுத்துச் சென்றனர்.


பின்னர், விக்கிரவாண்டியில் டீ குடிப்பதற்காக வாகனத்தை நிறுத்திய போதிய திருத்தப்பட்ட விடைத்தாள்களை ஓம்காந்தனிடம் ஜெயகுமார் கொடுத்து திரும்பி வைக்கும்படி கூறியுள்ளார். இதனையடுத்து, செப்டம்பர் 2ந் தேதி மதியம் 1:30 மணியளவில் டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.


மேலும், இந்த வழக்கில் இடைத்தரகராக செயல்பட்டு முறைகேடாக தேர்வர்களை வெற்றி பெற செய்ய பணம் பெற்று ஜெயகுமாருடன் கூட்டு சதியில் ஈடுபட்ட பாலசுந்தர் ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார்.


இந்நிலையில் தலைமறைவாகியுள்ள ஜெயகுமாரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தலைமறைவாகியுள்ள ஜெயகுமார் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.


இதனிடையே, சிபிசிஐடி அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஓம்காந்தன் மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த பாலசுந்தர்ராஜ் ஆகியோர் விசாரணைக்கு பிறகு சென்னை எழும்பூரில் உள்ள நீதிமன்ற குடியிருப்பில், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை பிப்ரவரி 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் இருவரும் பழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.


ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய மையங்களில் குரூப் 4 தேர்வு எழுதிய 99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்து, முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேரை தகுதி நீக்கம் செய்துள்ள தேர்வாணையம் அவர்கள் வாழ்நாள் முழுவதும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எழுத தடை விதித்துள்ளது.


இந்த முறைகேட்டில் தொடர்புடைய இரண்டு தாசில்தார்கள் உட்பட 10 பேரை கைது செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக ஓம்காந்தன் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். டிஎன்பிஎஸ்சி ஊழியரான ஓம்காந்தன் விடைத்தாள்களை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் விடைத்தாள்களை வேனில் கொண்டு செல்லும் வழியில் சாப்பிடுவதற்காக வேன் நிறுத்தப்பட்டதாகவும், அப்போது விடைத்தாள்களை மாற்றி முறைகேட்டில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.


சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து ஓம்காந்தனிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது வீட்டிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து ஏற்கனவே இடைத்தரகர்கள் 4 பேரிடம் பணம் கொடுத்த தேர்வர்கள் பட்டியலையும் சேகரித்து வருகிறது சிபிசிஐடி.


 


 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்