அரசு பேருந்தின் மீது தனியார் பேருந்து மோதியதில் 4 பேர் பலி - 20 பேர் படுகாயம்

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே விபத்துக்குள்ளாகி நின்ற அரசு பேருந்து மீது தனியார் சொகுசுப் பேருந்து மோதியதில், சாலையில் நின்று கொண்டிருந்த 4 பயணிகள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அரக்கோணத்தை சேர்ந்த ஐசக் என்பவர் தூத்துக்குடிக்கு சென்றுவிட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டையை அடுத்த இறைஞ்சி என்ற கிராமம் அருகே வந்தபோது, அறந்தாங்கியிலிருந்து சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்து காரின் பின்புறம் மோதியது. காரில் இருந்து இறங்கிய ஐசக், பேருந்து ஒட்டுனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பேருந்தில் இருந்த பயணிகளும் கீழே இறங்கி வாக்குவாதத்தை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி அதிவேகத்தில் வந்த தனியார் சொகுசு பேருந்து, நின்று கொண்டிருந்த அரசு பேருந்தின்மீது மோதியது. இந்த விபத்தில் ஐசக் மற்றும் அருகே நின்றிருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர். சாலையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்துக்குள்ளான வாகனங்கள் சாலையிலேயே கிடந்ததால் சென்னை - திருச்சி நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.