பில் இல்லாமல் அபராதம் வசூல் ரூ.2 லட்சம் வரை பணம் சுருட்டும் சென்னை டிராஃபிக் போலீஸ்!

சென்னை  பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபடும்போது, வாகன ஓட்டிகளிடம் தகராறு இன்றி நியாயமான முறையில் அபராதத்தை வசூலிக்க "கேஷ்லெஸ்” எனப்படும் முறையை அமல்படுத்தினார். இந்த முறையை பயன்படுத்தாமல் நேரடியாகப் பணம் பெறும் காவலர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, சென்னை மதுரவாயல் வழியாக எந்த ஊர் லாரி வந்தாலும் 200 ரூபாய் மாமூல் செலுத்த வேண்டும் என்று விதி இருப்பதாகக் கூறி காவலர்கள் லஞ்சம் வாங்கி வருவது தற்போது அம்பலமாகியுள்ளது. தூத்துக்குடி லாரி உரிமையாளர் மற்றும் தென்னிந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் கூட்டமைப்பின் நிர்வாகி கணேஷ் குமாருக்கு சொந்தமான லாரி ஒன்று சென்னை மதுரவாயல் வழியாகச் சென்றுள்ளது. அப்போது, லாரி ஓட்டுநர் அனைத்து ஆவணங்களையும் முறையாக வைத்திருந்தும் ரூ.200 சிட்டி போலீஸ் சட்டத்தின் கீழ் செலுத்தும்படி எஸ்.ஐ. கொளஞ்சியப்பன் கூறியுள்ளார். அதேபோல், கையில் கொடுத்தால் 200 மட்டுமே என்றும் கார்டில் செலுத்தினால் 300 என்றும் தெரிவித்துள்ளார். லாரி ஓட்டுநர், உரியமையாளருக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதால் கார்டு மூலமாக அபராதம் செலுத்திவிட்டு ரசீது கேட்டுள்ளார். அவர் கொடுத்த ரசீதில் ரூ.100 அபராதம் என்றே குறிப்பிடப்பட்டிருந்துள்ளது. இது குறித்து ஓட்டுநர் கேட்கையில், கொளஞ்சியப்பன் "அது சிட்டி போலீசுக்கு” என்று கூறியுள்ளார். இதனை பற்றி லாரி உரிமையாளர் கணேஷுக்கு மெசேஜ் வந்ததால், லாரி ஓட்டுநரிடம் விசாரித்துள்ளார். அதன் பின்னர், ஓட்டுநர் அனைத்து தகவல்களையும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, எஸ்.ஐ. கொளஞ்சியப்பன் மீது மதுரவாயல் காவல் ஆய்வாளரிடம் புகார் அளிக்கலாம் என்று பார்த்தால் அவரும் இதேபோல லஞ்சம் வாங்குவதில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. அதற்கான ஆவணங்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த சிட்டி போலீஸ் லஞ்சம் மூலம் ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் வரை அபராதத் தொகையை அந்த காவலர்கள் சுருட்டிக் கொள்வதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுமட்டுமல்லாமல், வாகனம் நிற்காமல் சென்றால் ரூ.1000 அபராதம் விதிப்பதாக ஓட்டுநர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளனர். அபராதத் தொகையை அரசிடம் செலுத்தாமல் அதில் ஊழல் செய்யும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.