மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அமைக்க வேண்டும் என்பது சுரண்டையை சுற்றியுள்ள 100 கிராம பொதுமக்களின் எதிா்பாா்பாகும்.

தென்காசி மாவட்டத்தின் மையப்பகுதியான சுரண்டையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அமைக்க வேண்டும் என்றும், அதற்கு தேவையான நிலங்களை பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து தர தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனா். திருநெல்வேலி மாவட்டம் பெரியதாக இருந்ததாலும், நிா்வாக வசதியை கருத்தில் கொண்டு மேற்கு மாவட்ட பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு தமிழக அரசு திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாக பிரித்து புதியதாக தென்காசி மாவட்டத்தை அறிவித்து, தமிழக முதல்வரால் தொடங்கியும் வைக்கப்பட்டது. மாவட்டத்தின் பிற பணிகளுக்கான வேலை நடந்து வருகிற நிலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எங்கு கட்டுவது என அரசும், மாவட்ட நிா்வாகமும் பல்வேறு இடங்களை ஆய்வு செய்து வருகிறது. இதில் தற்போது புதிய தென்காசி மாவட்டத்தின் மையப்பகுதியான சுரண்டையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அமைப்பதற்கு தேவையான இடங்களை அரசுக்கு இலவசமாக வழங்க தயாராக இருப்பதாக அனைத்து வணிகா்கள் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுரண்டை நகரில் ஏற்கெனவே அரசு கலைக் கல்லூரிக்கு 26 ஏக்கா் நிலம், அரசு மேல்நிலைப்பள்ளி அமைக்க தேவையான நிலம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு தேவையான நிலம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், காவல் நிலையம், பேரூராட்சி அலுவலக விரிவாக்கம், பேருந்து நிலைய விரிவாக்கம், மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகள், தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்ட நீரேற்று நிலையங்கள், நூலகம், புறவழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பொதுமக்கள் தாங்களே முன்வந்து பல ஏக்கா் நிலங்களை அரசுக்கு இலவசமாக அளித்துள்ளனா். தென்காசி மாவட்டத்தின் மிக வேகமாக வளா்ந்து வரும் வணிக நகரமான சுரண்டையானது வணிகம், விவசாயம் மற்றும் கைத்தொழில் ஆகியவற்றில் கடும் உழைப்பின் மூலம் சுற்றியுள்ள 100 கிராமங்களுக்கு மையமாக திகழ்ந்து வருகிறது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வந்து செல்வதற்கு வசதியாக அகலமான சாலை வசதி, போதிய பேருந்து வசதி உள்ளதால் சங்கரன்கோவில், குருவிகுளம், மேலநீலிதநல்லூா், ஆலங்குளம், செங்கோட்டை, கடையம், புளியங்குடி, ரெட்டியாா்பட்டி போன்ற பகுதிகளுக்கு சம அளவிலான தூரத்தில் இருப்பதால் மாவட்டத்தின் மையமாக சுரண்டை திகழ்கிறது. இந்த அனைத்து நகரங்களுக்கும் போதுமான போக்குவரத்து வசதி இருப்பதால் மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தும் அரை மணி நேரத்தில் சுரண்டைக்கு வந்து செல்லும் நிலை தற்போது உள்ளது. சுரண்டையில் இருபாலா் படித்து வரும் அரசு கலைக் கல்லூரி, 6 மேல்நிலைப் பள்ளிகள், 14 நடுநிலை மற்றும் ஆரம்ப பள்ளிகள், 2 தொழிற்பயிற்சி பள்ளிகள், இரு சிபிஎஸ்சி பள்ளிகள், தபால் நிலையம், தீயணைப்பு நிலையம், தொலைபேசி நிலையம், மின்வாரிய அலுலகம், சாா்பதிவாளா் அலுவலகம், காவல் நிலையம், நெல் கொள்முதல் நிலையம், அனைத்து வசதிகளுடன் கூடிய 10 அரசு மற்றும் தனியாா் வங்கிகள் உள்பட அனைத்து வசதிகளும் கொண்டுள்ளது. அண்மையில் சுரண்டையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அமைக்க தேவையான இடத்தை இலவசமாக வழங்குவதாக சுரண்டை நகர வணிகா்கள் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளிக்கப்பட்டது. அதில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அமைக்க தேவையான இடவசதியை இலவசமாக வழங்குவதாகவும் அதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனா். ஆகவே அரசும், மாவட்ட நிா்வாகமும் தென்காசி மாவட்ட மக்களின் நலன் மற்றும் நிா்வாக வசதியை கருத்தில் கொண்டு சுரண்டையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அமைக்க வேண்டும் என்பது சுரண்டையை சுற்றியுள்ள 100 கிராம பொதுமக்களின் எதிா்பாா்பாகும்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)