சென்னையில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் 100 ரூபாய் அபராதம்

சென்னையில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. அதுபோல், குப்பைகளை அள்ளுவதற்கு மாதக் கட்டணம் வசூல் செய்யும் திட்டத்தையும் சென்னை மாநகராட்சி அறிமுகம் செய்ய உள்ளது. சென்னையில் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை சேகரமாகிறது. சென்னை மாநகராட்சி, இந்தக் குப்பைகளை அள்ளி பெருங்குடி, கொடுங்கையூர் குப்பைக் கிடங்குகளில் கொட்டுகிறது. அதில் பல்வேறு பிரச்னைகள் உருவான நிலையில், குப்பையைக் கட்டுப்படுத்தவும், அவற்றை தரம் பிரித்து மறு சுழற்சி செய்யவும் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அதையொட்டி, 2016-ம் ஆண்டு திடக் கழிவு மேலாண்மை திட்டம் உருவாக்கப்பட்டது. அதில், குப்பையை உருவாக்குபவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கவும், விதிமுறைகளை மீறி குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும் சென்னை மாநகராட்சிக்கு தமிழக அரசு அனுமதி கொடுத்தது. அதன்படி, மாநகராட்சி குப்பை அள்ளுவதற்கு வீடுகள் மாதம் 10 முதல் 100 ரூபாய் வரையும், வணிக நிறுவனங்கள் 1000 முதல் 5000 வரையும், நட்சத்திர விடுதிகள் 300 முதல் 3 ஆயிரம் ரூபாய் வரையும், தியேட்டர்கள் 750 முதல் இரண்டு ஆயிரம் வரையும், அரசு அலுவலகங்கள் 300 முதல் 3 ஆயிரம் ரூபாய் வரையும், தொழில் உரிமம் பெற்றுள்ள கடைகள் 500 முதல் ஆயிரம் ரூபாய் வரையிலும் கட்டணமாகச் செலுத்த வேண்டும். மேலும், பொது இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் குப்பை அள்ள 5 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரையிலும், தனியார் பள்ளிகள் 500 முதல் 3 ஆயிரம் ரூபாய் வரையிலும் கட்டணமாகச் செலுத்த வேண்டும். நர்சிங் ஹோம்கள் 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. அதுபோல், பொது இடத்தில் குப்பை கொட்டுபவர்களுக்கு 500 ரூபாயும், தரம் பிரித்து வழங்காதவர்களுக்கு 500 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரையிலும், கட்டுமான கழிவுகளை பொது இடத்தில் கொட்டுபவர்களுக்கு 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரையிலும், குப்பையை எரிப்பவர்களுக்கு 500 ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரையிலும் அபராதம் விதிக்கப்படும். அதுபோல், பொது இடத்தில் எச்சில் துப்பும் நபர்களிடம் இருந்து 100 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்படும். அடுத்த மூன்று மாதங்களில் இந்த விதி நடைமுறைக்கு வரும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)