ஏப்பம் விட்ட 10 இலட்சம் கோடி!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசும்போது வங்கிகளில் வராக்கடனை வசூல் செய்வதற்காக பல்வேறு முயற்சிகள் எடுத்து வருவதாகவும் அவற்றில் ஒன்றுதான் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை இணைக்கும் திட்டம் ஆகும் என்றும் சொன்னார். அதை எதிர்த்து வங்கிப்பணியாளர்கள் போராட்டம் செய்துவருகிறார்கள். பொதுவாக வங்கிகளுக்கு இரத்த ஓட்டமாக செயல்படும் முதலீடுகள், வைப்பு தொகை இவையெல்லாம் நடுத்தர மற்றும் உழைக்கும் வர்க்கத்தைச்சேர்ந்தவர்களின் சேமிப்புகள் தான். இவர்கள் ஏதாவது தங்களது ஒரு தேவைக்காக வங்கிகளில் கடன் கேட்டு போனால், அவர்கள் கரணம் போட்டு, கைகூப்பி வணங்கினாலும் , அவர்களை அலைய வைத்து , வெறுப்பேற்றி விரக்தியோடு வங்கிகள் அனுப்பிவைக்கும். இதுதான் எதார்த்தம். எளிதில் கடன் பெறுவது என்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அதே வங்கி அதிகாரிகளை சரிகட்டி பெரிய முதலாளிகள் அந்தப்பணத்தை அட்டை போல உறிஞ்சிவிடுகிறார்கள். அவர்களில் பலர் வங்கிகளுக்கு அல்வா கொடுத்து விட்டு அயல்நாடுகளுக்கு தப்பிப் போய் அங்கே உல்லாச வாழ்க்கை வாழ்கிறார்கள். அவர்களைப் பிடித்து மீண்டும் இங்கே கொண்டுவருவதற்கு பதிலாக அவர்கள் வங்கிகளுக்கு தந்த இழப்பை சரி கட்ட மத்திய அரசு தனது நிதியைத்தருவது வாடிக்கையாக இருக்கிறது. இப்படி வங்கிகளை ஏமாற்றியவர்களின் பட்டியல் வெளிவந்திருக்கிறது. அந்தப் பட்டியலைப் பாருங்கள். 1. விஜய் மல்லையா 2. முகுல் சோக்சி 3. நிரவ் மோடி 4. நிசான் மோடி 5. புஷ் பேஸ் பாட்டியா 6. ஆஷிஷ் 7. சன்னி கலரா 8. சஞ்சை கலரா 9. வர்ஷா கலரா 10. ஆர்த்தி கலரா 11. சுதீர் கலரா 12. ஜதின் மேத்தா 13. உமேஷ் பாரிக் 14. கமலேஷ் பாரிக் 15. நிலேஷ் பாரிக் 16. வினய் மிட்டல் 17. ஏகல்வியா கார்க் 18. சேட்டன் ஜெயந்திலால் 19. நித்தின் ஜெயந்திலால் 20. தீப்தி வெய்ன் சேட்டன் 21. சவியாசேத் 22. ராஜீவ் கோயல் 23. அலகா கோயல் 24. லலித் மோடி 25. ரித்தேஷ் ஜெயின் 26. ஹிதேஷ் பட்டேல் 27. மயூரி பென் பட்டேல் 28. ஆஷிஷ் சுரேஷ் பை. இவர்களில் விஜய் மல்லையாவைத் தவிர மற்றவர்கள் அனைவரும் வட இந்தியர்கள். இவர்கள் சாப்பிட்டு ஏப்பம் விட்ட வங்கித்தொகை லட்சம் கோடி மட்டும்தான். இந்தப் பட்டியலில் ஒரு தமிழன் கூட இல்லை . ஒரு முஸ்லிம் பெயர் கூட தென்படவில்லை . இரண்டு மாதங்களுக்கு முன்பு நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், ” இந்திய பொருளாதாரம் ஐசியூவில் இருக்கிறது” என்று சொன்னது உங்களுக்கு ஞாபகம் வரலாம். அங்கிருந்து அந்த ஆபத்திலிருந்து இந்தியாவை மீட்க வேண்டுமென்றால் இந்தக் கில்லாடிகளைப் பிடித்துக் கொண்டுவந்து அவர்கள் கொள்ளையடித்த பணத்தை அவர்களிடம் இருந்து மீட்க வேண்டும். அப்போதுதான் பொருளாதார மந்தத்தில் மாட்டிக்கொண்ட நமது தேசத்தை புனரமைக்க முடியும். செய்வார்களா? - எஸ். அய்யப்பன், அயனாவரம்