சொல்லிவிட்டு செய்த ஈரான்.. என்ன நடந்தது....

இராக்கின் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் வைத்து, இரான் ராணுவப்படை தளபதி காசிம் சுலைமானியை ட்ரோன் தாக்குதல் நடத்திக் கொன்றது அமெரிக்கா. அவர், அமெரிக்கர்களைத் துன்புறுத்தியதாகவும் அமெரிக்காவுக்கு எதிராகப் பல சதிகளை நடத்தியதாகவும் சுலைமானியின் கொலைக்குக் காரணம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சுலைமானியின் கொலையினால் இரு நாடுகளுக்கும் இடையே போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் இரான், இராக் ஆகிய இரு நாடுகளிலும் பதற்றம் அதிகரித்துள்ளது.சுலைமானியின் கொலைக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இரான் அறிவித்துள்ளது. முன்னதாக, சுலைமானி இறந்த மறுதினமே, இராக்கில் உள்ள அமெரிக்கத் தளம்மீது இரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. அதில் எந்த உயிர் பாதிப்பும் ஏற்படவில்லை.இந்தத் தாக்குதல் தொடர்பாகப் பதில் அளித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “ இராக்கில் உள்ள ஒரு அமெரிக்கர் அல்லது அமெரிக்கப் படைக்கு சேதம் ஏற்பட்டால், இரானில் இருக்கும் 52 இடங்கள் குறிவைக்கப்படும்” என்று கடுமையாக எச்சரித்திருந்தார். மேலும், ‘எங்களுடன் போர் நடத்த வேண்டாம், மீறினால் இதுவரை பார்க்காத அளவு கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்’ எனப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருந்தார். இதையடுத்து, நேற்று சுலைமானியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதற்காக, இரான் தலைநகர் தெஹ்ரானில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்து ,தங்கள் நாட்டுத் தலைவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.சுலைமானியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்தில், கிழக்கு இராக்கில் உள்ள அல்- அசாத் ராணுவத் தளம் மீது இரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. அந்த ராணுவத் தளம் அமெரிக்காவுடையது என்பதால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இராக்கில் நடந்த தாக்குதலை அமெரிக்க பாதுகாப்பு அமைப்பான பென்டகன் உறுதிப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சுலைமானியின் இறுதிச் சடங்கு முடிந்த பிறகு, 12-க்கும் அதிகமான இரானிய ஏவுகணைகள், இராக்கில் உள்ள அமெரிக்கத் தளம்மீது ஏவப்பட்டுள்ளன. அதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டுவருகிறது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. “இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத்தளம்மீது இரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக எங்களுக்குத் தகவல் வந்துள்ளது. இது தொடர்பாக அதிபர் ட்ரம்ப்புக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராக்கில் நிலவும் நிலைமையை நாங்கள் கூர்ந்து கவனித்து வருகிறோம். இது தொடர்பாக தேசிய பாதுகாப்புப் படையுடன் ஆலோசனை நடைபெற்றுவருகிறது” என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பு செயலர் ஸ்டீபன் க்ரிஷம் (Stephanie Grisham) கூறியுள்ளார். அமெரிக்கப் படை மீது தாக்குதல் நடத்தியதை இரான் ஒப்புக்கொண்டுள்ளது. “இரான் புரட்சிகர விமானப்படையைச் சேர்ந்த துணிச்சல்மிக்க வீரர்கள் ‘ஆபரேஷன் தியாகி சுலைமானி’-க்காக இன்று ( நேற்று) வெற்றிகரமாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஒருவேளை, அமெரிக்காவின் நட்பு நாடுகள் இரான் மீது தாக்குதல் நடத்தினால், நிச்சயம் அவர்கள் ராணுவ பதிலடிக்கு இலக்காவார்கள் என எச்சரித்துக்கொள்கிறோம்” என்று இரான் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “ எல்லாம் நன்றாகவே உள்ளது. இராக்கில் உள்ள இரண்டு ராணுவத் தளங்கள்மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. அங்கு ஏற்பட்ட பாதிப்பு மற்றும் உயிர்ச்சேதம் குறித்து ஆய்வு செய்யப்பட்டுவருகிறது. உலகிலேயே சக்தி வாய்ந்த மற்றும் சிறந்த ஆயுதங்கள் கொண்ட ராணுவம் எங்களிடம் உள்ளது. இதுகுறித்து நாளை காலை அறிக்கை வெளியிடுவேன்” என்று பதிவிட்டுள்ளார். இரான், இராக்கில் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் தொடர்பாகப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகின்றன. ஏவுகணைத் தாக்குதலுக்குப் பயந்து, அப்பகுதியில் உள்ள மக்கள் கதறியபடி தங்கள் பகுதிகளை விட்டு வெளியேறும் அதிர்ச்சிக் காணொளிகள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்