அமைச்சர் ஜெயக்குமாருக்கு மு.க.ஸ்டாலின் பதில்

உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று இனியாவது முறையான இடஒதுக்கீட்டைச் செய்து, உள்ளாட்சித் தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, திமுக மீது விழுந்த சம்மட்டி அடி என அமைச்சர் ஜெயக்குமார் கூறியதை மறுத்தார். திமுகவுக்கு சம்மட்டி அடி என்றால், அதிமுகவுக்கு மரண அடி எனவும் விமர்சித்தார். தேர்தலை நிறுத்துவதற்காக, திமுக வழக்கு தொடரவில்லை என உச்சநீதிமன்றமே கூறியுள்ளதாக, மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். மேலும், இடஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தவறான தகவலை கூறியதாகக் குற்றம்சாட்டிய மு.க.ஸ்டாலின், உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புபடி, இனியாவது இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றி உள்ளாட்சித் தேர்தலை நடத்த, மாநில தேர்தல் ஆணையம் முயற்சிக்க வேண்டும் என்றார்.