உயர் நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழியாவது எப்போது... - மத்திய அரசுக்கு வழக்கறிஞர் சங்கங்கள் கடிதம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் என தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 13 ஆண்டுகள் நிறைவடைந்தன. இந்த தீர்மானத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை உடனடியாகப் பெற்றுத் தருமாறு மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றக் கிளை வழக்கறிஞர்கள் சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன. இதுதொடர்பாக உயர் நீதிமன்றக் கிளை அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மத்திய உள்துறை மற்றும் சட்டத் துறை செயலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நீதிமன்றங்களில் மாநில மொழிகளை அலுவல் மொழியாக்க அரசியலமைப்பு சட்டம் பிரிவு 348-ல் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பிஹார் ஆகிய உயர் நீதிமன்றங்களில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் இந்தி அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்டது. மொழி ஆணையத்தின் பரிந்துரையில் உயர் நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழிகளில் உத்தரவுகள் பிறப்பிப்பது தொடர்பாக 1963-ல் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது. அச்சட்டத்தின் 7-வது பிரிவில் உயர் நீதிமன்றத்தில் ஆங்கிலத்துடன் சேர்ந்து அந்த மாநில மொழிகளிலும் உத்தரவுகள் பிறப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக அறிவிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என தமிழக சட்டப் பேரவையில் 6.12.2006-ல் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. மொழி ஆணையம் தொடர்பாக நாடாளுமன்றக் குழு அறிக்கையில் உயர் நீதிமன்றங்களில் மாநில மொழிகளை அலுவல் மொழியாக அறிவிக்க குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு முன்பு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் ஒப்புதல் பெற வேண்டியதில்லை எனக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இதை மீறி ஒவ்வொரு முறையும் தமிழக அரசின் கோரிக்கையை நேரடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு மத்திய அரசு அனுப்பி வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை அரசியலமைப்புச் சட்டம், அலுவல் மொழி சட்டம் மற்றும் நாடாளுமன்றக் குழுவின் முடிவுக்கு எதிராக அமைந்துள்ளது. இதனால் அரசியலமைப்புச் சட்டத்தின் 348 (2) பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதல் பெறாமல் அனைத்து உயர் நீதி மன்றங்களிலும் மாநில மொழிகளை அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படுகிறது. இதேபோல் தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு 13 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற தீர்மானத்துக்கு குடியரசுத் தலைவரிடம் விரைவில் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு