விரைவு ரயில்களில் பெண்கள் தனிப்பெட்டி அகற்றம்: கூட்ட நெரிசலில் சிக்கித்தவிக்கும் அவலம்

வேலூர்: தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் இருந்து இயக்கப்படும் விரைவு ரயில்களில் பெண்கள் மட்டுமே பயணிக்க வசதியாக இணைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டுள்ளது. இதனால் பெண் பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ரயில்வே துறையில் மின்தொடர் ரயில்கள், விரைவு, அதிவிரைவு, சொகுசு ரயில்கள் என 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 500 கோடி மக்கள் ரயில்களில் பயணித்து வருகின்றனர். சரக்கு ரயில்கள் மூலம் 35 கோடி டன் சரக்குகள் கையாளப்படுகின்றன.குறிப்பாக சிறுநகரங்களில் இருந்து பெருநகரங்களுக்கு கல்வி, வேலை, வியாபாரம், மருத்துவம், சுற்றுலா என பல்வேறு தேவைகளுக்காக்காவும் ஏராளமான பொதுமக்கள் ரயில்களில் பயணிக்கின்றனர். பெரும்பாலான மக்கள் விரைவு மற்றும் அதிவிரைவு ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். அதற்கான ரயில் டிக்கெட் அல்லது மாதாந்திர பயணச்சீட்டு பெற்றுக்கொண்டு பணிகள் ரயில்களில் பயணித்து வருகின்றனர்.பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்களில் தனிப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தது. இதன் மூலமாக பெண்கள் பொதுபிரிவு பெட்டிகளில் நெரிசலில் சிக்கித்தவிக்கும் சூழல் ஏற்படாமல் இருந்தது.இந்நிலையில், அண்டை மாநில நகரமான பெங்களூருவில் இருந்து சென்னை கோட்டம் எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் அதிவிரைவு ரயில்களில் பெண்களுக்கான தனி ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெண் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், பொது பிரிவு பெட்டிகளில் கூட்ட நெரிசலில் சிக்கித்தவித்தபடி பாதுகாப்பற்ற நிலையில் பயணிக்கின்றனர். இதுகுறித்து பெண் பயணிகள் கூறுகையில், சென்னையில் இருந்து பெங்களூருக்கு தினமும் 300க்கும் மேற்பட்ட பெண்கள் ரயில்களில் பயணித்து வருகின்றனர். பெண்கள் வசதிக்கென லால்பாக் விரைவு ரயில், சென்னை-மைசூரு விரைவு ரயில்களில் பெண்களுக்கென தனிப்பெட்டி இணைக்கப்பட்டிருந்தது. இந்த பெட்டிகளில் பெண்கள் பாதுகாப்பாக பயணித்து வந்தோம். தற்போது ரயில்வே துறை நவீன மயமாக்கள் திட்டத்தின் கீழ் புது தயாரிப்பான எல்எச்பி வகை பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.இந்த பெட்டிகள் இணைக்கப்பட்டதால் பெண்களுக்கான பெட்டிகள் சமீப காலமாக இணைக்கப்படவில்லை. இதனால் கூட்ட நெரிசல் மிகுந்த பொதுபிரிவு பெட்டிகளில் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இருக்கைகள் கிடைக்காததால் நீண்டதூரம் நின்றபடி பயணிக்கின்றோம். இதனால் மிகவும் மன உளைச்சல் ஏற்படுகிறது. மேலும், தனியாக செல்லும் பெண்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது. அதேபோல் காலையில் இயக்கப்படும் தினசரி விரைவு ரயிலான பெங்களூரு-சென்னை காவேரி விரைவு ரயிலில் கார்ட் பெட்டியுடன் இணைக்கப்பட்டுள்ள சிறியளவு இடவசதி கொண்ட ரயில் பெட்டி பெண் பயணிகளுக்கு போதுமானதாக இல்லை. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் பரிதவிக்கின்றனர்.எனவே, ரயில்களில் தினந்தோறும் பயணிக்கும் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக தினமும் சென்று வரும் விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்களில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த பெண்களுக்கான தனி பெட்டிகளை இணைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.