இடைத்தேர்தல் : பா.ஜ., முன்னிலை

கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று ( டிச.,9) வெளியாக உள்ளது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. இதில் துவக்கம் முதலே பா.ஜ., முன்னிலையில் இருந்து வருகிறது. கர்நாடகாவில் மஜத - காங்., கூட்டணி ஆட்சியில் இருந்தபோது ஆட்சியை கலைக்க பா.ஜ அரசு பல முயற்சிகளை செய்தது. இந்நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 17 பேர் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்தனர். இந்த எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை கவர்னர் ஏற்கவில்லை. 17 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தார். இதனை தொடர்ந்து மாநிலத்தை ஆளும் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. புதிய அரசாக பா.ஜ பொறுப்பேற்றுக் கொண்டது. மாநில முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். இந்த தகுதி நீக்கத்தை எதிர்த்து 17 பேரும் சுப்ரீம்கோர்ட்டில் முறையிட்டனர். வழக்கு விசாரணையில், இந்த தகுதி நீக்கம் செல்லும் எனவும் இடைத்தேர்தலில் அவர்கள் போட்டியிட தடை இல்லை என்றும் கோர்ட் உத்தரவிட்டது. இதனால் கர்நாடக சட்டசபையில் 17 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு, பெங்களூருவில் உள்ள ராஜராஜேஸ்வரி நகர் மற்றும் ராய்ச்சூரில் உள்ள மஸ்கி தொகுதியை தவிர மற்ற 15 தொகுதிகளுக்கு டிச.,5 ல் இடைத்தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று கர்நாடகா முழுவதும் 11 மையங்களில் எண்ணப்படுகிறது. பெரும்பான்மையை நிரூபிக்க 6 இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் பா.ஜ., உள்ளது. தற்போது பா.ஜ.,விடம் 105 எம்எல்ஏ.,க்கள் உள்ளனர். பெரும்பான்மையை நிரூபிக்க 112 எம்எல்ஏ.,க்கள் தேவை.