எங்கள் நாட்டில் குடியுரிமைச் சட்டத்தை கொண்டு வந்தால் என்ன நடக்கும்: மலேசிய பிரதமர் விமர்சனம்

இந்தியா கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்த சட்டத்தை மலேசியாவில் கொண்டு வந்தால் என்ன நடக்கும் என்று மலேசிய பிரதமர் மகாதீர் முகமத் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கடந்த வாரம் குடியுரிமைத் திருத்த மசோதாவைக் கொண்டு வந்தது. இதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குடியுரிமைத் திருத்தம் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிராக உள்ளது என்று இந்தியாவின் பல இடங்களில் போராட்டம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் குடியுரிமைத் திருத்த சட்டத்தை மலேசிய பிரதமர் மகாதீர் முகமத் விமர்சித்துள்ளார். கோலாலம்பூரில் நடந்த உச்சி மாநாட்டில் மலேசிய பிரதமர் இந்தியா கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்த சட்டத்தின் தேவை என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து மலேசியா பிரதமர் கூறும்போது, “மதச்சார்பற்ற நாடு என்று தன்னை கூறிக் கொள்ளும் இந்தியா, முஸ்லிம்களின் குடியுரிமையைப் பறிக்க நடவடிக்கை எடுத்து வருவதைக் கண்டு நான் வருந்துகிறேன். இதே நடவடிக்கையை நாங்கள் எங்கள் நாட்டில் செய்தால் என்ன நடக்கும் என்று தெரியவில்லை. இங்கு குழப்பமும், நிலையற்றத்தன்மையும் உண்டாகும். அனைவரும் பாதிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்தார். இந்த நிலையில் மலேசிய பிரதமர் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், இது இந்தியாவின் உள் விவகாரம் என்று பதிலளித்துள்ளது.