ராஜாஜி என்னும் மகத்தான ஆளுமை!

இந்தியாவின், முதல் கவர்னர் ஜெனரல், சென்னை மாகாணத்தின் முதல் அமைச்சர், மேற்கு வங்க கவர்னர், இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர் போன்ற பல பதவிகளிலும் பணியாற்றிய, சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரை, ராஜாஜி என்றும், சி.ஆர்., என்றும் சுருக்கமாக அழைப்பர்.'பாரத ரத்னா' விருதைப் பெற்ற முதல் இந்தியர்களில் ஒருவர். 'சேலத்து மாம்பழம்' என, செல்லப் பெயர் கொண்ட ராஜாஜி, டிசம்பர் மாதம், 10ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூருக்கு அருகில் உள்ள தொரப்பள்ளி கிராமத்தில், சக்கரவர்த்தி வெங்கடார்யா, தாயார் சிங்காரம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். அரசியலில் முழுமையாக ஈடுபாடு கொண்ட ராஜாஜி, தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்டு, சிறை சென்றவர். மஹாத்மா காந்திஜியின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்கிய இவரை, மஹாத்மாவின் மனசாட்சி என்றும் சொல்வர். மஹாத்மா காந்திஜியின் சம்மந்தியாகவும் விளங்கினார். இவருடைய சாதுர்யத்தைப் பாராட்டி இவரை, 'மூதறிஞர்' என்று, எல்லா தலைவர்களும் அழைத்தனர்.மிக எளிமையாக, வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டிய இத்தலைவர், டிசம்பர், 25ம் தேதி, 1972ம் ஆண்டில் சென்னையில் தன், 94வது வயதில் மறைந்தார். ஆரம்ப காலத்தில், காங்கிரஸ் கட்சியில் இருந்தபோதிலும், சுதந்திரா கட்சி என்னும் ஒரு கட்சியை, இவர் நிறுவினார். நேருவிடம் கொண்ட மாறுபட்ட கருத்தினால், புதிய கட்சியை ஆரம்பிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது.ராஜாஜி, 'நேர்மையான ஒரு அரசியல், இந்திய தேசத்தில் இருக்க வேண்டும்' என்று எண்ணினார். இன்னும் சுருங்கச் சொல்வதானால் 'ராம ராஜ்ஜியம்' இந்தியாவில் ஏற்பட வேண்டும் என்பதற்காக பாடுபட்டார். திருக்குறளின் அறத்துப்பாலுக்கு விளக்கம் எழுதியவர் ராஜாஜி. இதை கல்கி சதாசிவம் புத்தகமாகவும் கொண்டு வந்தார்.'நவசக்தி' பத்திரிகையில் கல்கி இருந்தபோது, சில கதைகளை எழுதினார். அவற்றைத் தொகுத்து, 'சாரதியின் தந்திரம்' என்ற நுாலாக வெளியிட்டார். இந்தப் புத்தகத்திற்கு ராஜாஜியிடம் முன்னுரை பெற வேண்டும் என்று எண்ணினார் கல்கி. புத்தகத்தின் நகலை, ராஜாஜியிடம் காட்டினார். உலக ஞானம் இருக்காது 'கதைகள் நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால், சில கதைகளின் வாக்கியங்களை நீக்க வேண்டும்' என்று கல்கியிடமே சொன்னார், ராஜாஜி.'பல கதைகள் மனதைத் தொடுகின்றன. பொதுவாக, தமிழ்நாட்டு எழுத்தாளர்களுக்கு உலக ஞானம் அவ்வளவாக இருக்காது. ஆங்கில இலக்கியங்களைப் படித்திருக்க மாட்டார்கள். 'ஆனால், சுபத்திரையின் சகோதரன் என்ற கதையைப் படித்தபோது, ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட்டிலுள்ள நாடகப் பாத்திரங்கள் நினைவுக்கு வருகின்றன. உங்களுடைய எழுத்தில் ஒரு காந்த சக்தி இருக்கிறது' என்று கல்கியைப் பாராட்டினார் ராஜாஜி. தீண்டாமை ஒழிப்பு ராஜாஜியின் நம்பிக்கைக்கும், அன்புக்கும் பாத்திரமாக இருந்தவர், ஈ.வெ.ரா., திருச்செங்கோட்டில் காந்தி ஆசிரமத்தை ராஜாஜி துவக்கியதும், ஈ.வெ.ரா., அதை திறந்து வைத்ததுடன், ராஜாஜிக்கு துணையாக இருந்து பணியாற்றினார். ஆசிரமத்தில் தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு பணிகளிலும் ராஜாஜியுடன் இணைந்து, ஈ.வெ.ரா., பிரசாரம் செய்து வந்தார்.அந்த நாட்களில், ஈ.வெ.ரா., தன் தோள் மீது கதர் துணிகளை மூட்டையாக கட்டி சுமந்து வந்து, கிராமம் கிராமமாக சென்று, கதரை விற்பனை செய்தார். ஈ.வெ.ரா.,வுடன் ராஜாஜி நட்பு பாராட்டினாரே தவிர, ஈ.வெ.ரா.,வுடைய கொள்கைகளுடன் உடன்படவும் இல்லை; அவரை அதற்காக கடிந்து கொண்டதும் இல்லை. தனி மனித விருப்பு வெறுப்புகளுக்கு நாம் இடம் கொடுக்க வேண்டும் என்ற சிந்தனை உடையவர் ராஜாஜி.ராஜாஜி புதுமைகளை வரவேற்பதிலும் விருப்பம் கொண்டவர். அமெரிக்க நாட்டுக்கு அவர் சென்றபோது எப்படி உடை அணிந்து கொள்ள வேண்டும் என்று, பலரிடம் தெரிந்து கொண்டார்.பஞ்சகச்சம் கட்டுவது தான் அவருடைய பழக்கம். எனவே, அமெரிக்காவுக்கும் பஞ்சகச்சம் கட்டி தான் செல்ல வேண்டும் என்று முடிவு செய்தார். 'அமெரிக்காவில் சில இடங்களில் குளிர் இருக்குமே என்ன செய்வது' என்று யோசித்தார். அப்போது ஒரு யோசனை தோன்றியது. பஞ்சகச்சத்தை உருவாக்கும்போது, பருத்தி துணியின் உள்பக்கமாக கம்பளி வைத்து ஒரு டெய்லரை வைத்து தைக்கச் சொல்லலாம் என்று சதாசிவத்திடம் கருத்து தெரிவித்தார்.பஞ்சகச்சத்தை ரெடிமேடாக தயாரிக்கலாம் என்ற எண்ணத்தை முதன் முதலில் விதைத்தவர் அவர் தான்.மிக நல்ல இளைஞர்கள் உருவானால், நம் நாடு முன்னேறும் என்ற கருத்தை கொண்டவர், ராஜாஜி. இளைஞர்களோடு நட்புடன் பழகினால் தான், அவர்களை நம் வழிக்கு கொண்டு வரலாம் என்று எண்ணியவர்.ராஜாஜிக்கு கிரிக்கெட் என்றால் அவ்வளவாகப் பிடிக்காது. கிரிக்கெட் விளையாட்டு என்றாலே, அது பல சோம்பேறிகளை உருவாக்கும் விளையாட்டு என்ற எண்ணம், கல்கிக்கு உண்டு.ஆனால் கல்கியும், குழந்தைகளின் மகிழ்ச்சியில் தன்னுடைய கருத்தை திணித்தது இல்லை. கல்கியின் மகன் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்டபோது, அதற்காக சிறுவர்களுக்கான கிரிக்கெட் மட்டை பந்துகளை வாங்கிக் கொடுத்திருக்கிறார், கல்கி. கிரிக்கெட் குதுாகலம் கிரிக்கெட் மட்டையை வைத்து, குழந்தைகள் விளையாடிக் கொண்டு இருந்தனர். அந்த நேரம் பார்த்து, ராஜாஜி அங்கே வருகிறார். குழந்தைகளுடைய கிரிக்கெட் குதுாகலத்தைப் பார்த்ததும், தானும் விளையாட வரலாமா என்று கேட்கிறார்.குழந்தைகள், அவரை விளையாட்டில் இணைத்துக் கொள்கின்றன. முதல் பந்து வீசப்பட்டவுடன், அப்பந்து ராஜாஜியின் மட்டையில் மாட்டிக் கொள்ளாமல், அவருடைய காலை பதம் பார்க்கிறது.உடனே ராஜாஜி, 'நான் எல்.பி.டபிள்யூ., ஆகி விட்டேன்' என்று சொல்லி, மைதானத்தில் இருந்து வெளியேறுகிறார். காலில் வலி இருந்தாலும், குழந்தைகளிடம் அதைக் காட்டிக் கொள்ளவோ அல்லது அவர்களைக் கண்டிக்கவோ முற்படாமல், ராஜாஜி மைதானத்தை விட்டு வெளியேறுகிறார். புதிய தொழிலில் உடன்பாடுஅரசு கடன் சுமையை உயர்த்திக் கொண்டே போவதை அவர் விரும்பவில்லை. புதிய தொழில்கள் துவங்க வேண்டும் என்பதில் அவருக்கு உடன்பாடு இருந்தது.ஆனால், அதேசமயத்தில் கைத்தொழிலையும், குடிசை தொழிலையும், விவசாய தொழிலையும் புறக்கணிக்கக் கூடாது என்று எண்ணினார். அதை வலியுறுத்த முற்பட்டபோது, அவரை தமிழகமும் புறக்கணித்தது, இந்தியத் தேசமும் புறக்கணித்தது.ஆனால், இன்று நம் நாட்டில் உள்ள பொருளாதார மேதைகளில் இருந்து, அரசியல்வாதிகளில் இருந்து, கல்விமான்களில் இருந்து எல்லாரும் சொல்லக்கூடிய ஒரு கருத்து, 'இந்தியாவில் விவசாயம் அழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோன்று, இந்தியாவின் பாரம்பரிய தொழில்களும் மறைந்து விடக் கூடாது' என்பது தான்.இதைத் தான் அன்றே, ராஜாஜி தன் திட்டத்தின் மூலம் தெளிவுபடுத்தினார். பின்னால் வரக்கூடிய விஷயங்களை முன்பே நன்கு அறிந்து கணித்துக் கூறியதால் தான் அவருக்கு, 'மூதறிஞர்' என்று பட்டம் கொடுத்து, பாராட்டினரோ என்னமோ


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு