வங்கி மேலாளர் அடித்துக் கொலை: அதிமுக கிளைச் செயலாளர் உள்ளிட்ட 7 பேர் கைது

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினர் நடத்திய கூட்டத்தில் ஊராட்சி தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்ற விவகாரத்தில் தட்டிக்கேட்ட வங்கி மேலாளர் ஒருவர் நேற்று நள்ளிரவு (புதன் இரவு) அடித்துக் கொலை செய்யப்பட்டார். சாத்தூர் அருகே உள்ளது கோட்டைப்பட்டி ஊராட்சி. இங்கே 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் கோட்டைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்பது தொடர்பான குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினர் நேற்று நள்ளிரவு ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்பொழுது அதே ஊரைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலர் ராமசுப்பு என்பவர் தான் போட்டியிட விரும்புவதாக தெரிவித்துள்ளார். அதேநேரம் காங்கிரஸ் கட்சி பிரமுகர் சுப்புராம் என்பவரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு நேற்று விருப்ப மனு வாங்கி வந்துள்ளார். இக்கூட்டத்திற்கு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படாமல் ராமசுப்பு தனக்கு வேண்டிய நபர்களை மட்டும் வைத்து கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரது மகன் சதீஷ்குமார் (27) அக்கூட்டத்திற்கு சென்று தட்டி கேட்டுள்ளார். மேலும் இதுபோன்ற கூட்டத்திற்கு சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் அழைப்பு எடுக்கப்பட வேண்டும் என்றும் தனது அண்ணன் முறையான சுப்புராம் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு அளித்துள்ளது பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிலர் சதீஷ்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். தலையில் பலத்த காயமடைந்து சுயநினைவை இழந்த சதீஷ்குமார் மயங்கி விழுந்துள்ளார். இதனால் அங்கிருந்தவர்கள் சதீஷ்குமாரை தங்களது காரில் அழைத்துக்கொண்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சென்று உள்ளனர். மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்துவிட்டு சதீஷ்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தகவலறிந்த வெம்பக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் சுந்தரபாண்டியன் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தினார். மேலும் இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து கோட்டை பட்டியைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலர் ராமசுப்பு (47) மற்றும் அவரது ஆதரவாளர்களான கணேசன், முத்துராஜ், சுப்புராம், ராம்குமார், சுப்புராஜ், செல்வராஜ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட சதீஷ்குமாரின் தந்தை விஜயகுமார் உடல் நலம் பாதிக்கப்பட்டவர். தம்பி ஒருவர் ஏரோநாட்டிக்கல் பொறியியல் பட்டமும் மற்றொரு தம்பி பிளஸ்-2 முடித்துவிட்டு நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வருகிறார். குடும்பத்தின் மூத்த மகனான சதீஷ்குமார் எம்பிஏ பட்டதாரி. சிவகாசியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் விற்பனை பிரிவு மேலாளராக பணியாற்றி வந்தார். அவரது வருமானத்தை கொண்டு குடும்பம் இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், சதீஷ்குமார் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தால் கோட்டைப்பட்டி கிராமத்தில் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மோதல்கள் ஏற்படாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)