3 ஆண்டுகளாக கழிவறையில் வசித்து வரும் மூதாட்டி

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியின மூதாட்டி ஒருவர், மூன்று ஆண்டுகளாக கழிவறையில் வசித்து வருகிறார். ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தான் திரவுபதி பெஹரா, பழங்குடி பெண். வயது 72. கணவர் இறந்து விட்டதால் தனது மகள், பேரனுடன் ஒரே குடும்பமாக வசித்து வருகிறார். அங்குள்ள கன்னிகா கிராம நிர்வாகம் சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட கழிப்பறையில் தான் சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் மகளும், பேரனும் அந்த அறைக்கு வெளியே தூங்குகிறார்கள். அரசு சார்பில் வீட்டு கட்டித் தரப்படும் என அதிகாரிகள் கூறியதையடுத்து, அந்த நம்பிக்கையில் காத்திருக்கிறார் திரவுபதி பெஹரா. இது பற்றி பஞ்சாயத்து தலைவர் கூறுகையில், 'அந்த மூதாட்டிக்கு வீடு கட்டிக் கொடுப்பதற்கு எனக்கு நேரடியாக அதிகாரம் கிடையாது என்றும் அரசுத் திட்டத்தின்கீழ் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டால், அவருக்கு வழங்குவோம்' என்று கூறியுள்ளார்.