போலீசார் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு இடங்களிலும் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறைகள் அரங்கேறின... மங்களூரில் போலீசார் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்திரில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர். அனுமதியின்றி போராட்டம் நடத்திய 1200 பேர் கைது செய்யப்பட்டனர். பாதுகாப்புக்கான 52 கம்பெனி துணை ராணுவப் படையினர் களமிறக்கப்பட்டனர். போராட்டங்களை தடுக்க டெல்லி-குர்கான் சாலையில் பல்வேறு இடங்களில் பேரிகார்டுகள் வைக்கப்பட்டு, சோதனைக்குப் பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, காலை நேரத்தில் சாலையில் வாகனங்கள் தேங்கின. போராட்டம் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் விமான சேவைகளும் பாதிக்கப்பட்டன. உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்னோவில் நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸ் வேன் உள்ளிட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. தடியடி நடத்தியும் பலன் இல்லாததால், போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார். சம்பாலில் பேருந்து ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டது. அங்கு கலவரம் பரவுவதை தடுப்பதற்காக மொபைல் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன. குஜராத்தின் அகமதாபாத் நகரில் நடைபெற்ற போராட்டத்தின்போது, காவல்துறையினரின் வாகனங்கள் கல்வீசி தாக்கப்பட்டன. இதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களை தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போலீசார் விரட்டினர். கர்நாடக மாநிலம் மங்களூருவில், தங்களைத் தாக்கிய போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய தற்காப்பு துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், சுமார் 20 பேர் வரை இந்த கலவரத்தில் காயமடைந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. பெரும் வன்முறை வெடித்ததையடுத்து மங்களூரு நகரில் ஊரடங்கு உத்தரவானது வரும் 22ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.