1990 முதல் 2019 வரை 22,557 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்: மத்திய அரசு

ஜம்மு காஷ்மீரில் 1990 ஆம் ஆண்டு முதல் 2019 டிசம்பர் ஒன்றாம் தேதி வரை 22 ஆயிரம் தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் நிலைமை குறித்து மக்களவையில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு உள்துறை இணையமைச்சர் கிசன் ரெட்டி எழுத்து மூலம் பதிலளித்தார். அதில், 1990 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை வன்முறைச் சம்பவங்களின்போது 22 ஆயிரத்து 557 தீவிரவாதிகளைப் பாதுகாப்புப் படையினர் கொன்றதாகத் தெரிவித்துள்ளார். 2005 ஆம் ஆண்டுமுதல் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் வரை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் ஊடுருவல் முயற்சியின்போது ஆயிரத்து 11 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 42 பேர் கைது செய்யப்பட்டதாகவும், இரண்டாயிரத்து 253 பேர் திருப்பி அடித்து விரட்டப்பட்டதாகவும் அமைச்சர் கிசன் ரெட்டி தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.