பழங்காலத்திலேயே கடல் வணிகத்தில் சிறந்து விளங்கியது தமிழகம்: வெங்கையா நாயுடு

பூம்புகார், மாமல்லபுரம் உள்ளிட்ட துறைமுகங்களின் மூலம் தமிழகத்தில் பழங்காலத்திலேயே கடல் வாணிபம் சிறந்து விளங்கியதாகக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். சென்னை பள்ளிக்கரணையில் உள்ள தேசியக் கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அனைவரையும் தமிழில் வரவேற்றார். தொடர்ந்து பேசிய வெங்கையா நாயுடு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் லோதால், பூம்புகார் ஆகிய துறைமுகங்கள் மூலம் கடல் வாணிபம் நடைபெற்று வந்ததாகத் தெரிவித்தார். ராஜேந்திர சோழன் காலத்தில் காவிரிக் கழிமுகப் பகுதியான பூம்புகாரில் இயற்கைத் துறைமுகம் இருந்ததையும் அதில் கடல் வாணிபம் சிறந்து விளங்கியதையும், சோழர்களிடம் வலிமை மிக்க கடற்படை இருந்ததையும் வெங்கைய நாயுடு குறிப்பிட்டார். ஏழாம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் மாமல்லபுரம் சிறந்த துறைமுகமாக விளங்கியதாகவும் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.