புற்றுநோய் பாதித்த கோழி இறைச்சி விற்கப்படுவதாக, சமூக வலைதளத்தில் வேகமாக பரவும், 'வீடியோ'வால், பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

சென்னை: புற்றுநோய் பாதித்த கோழி இறைச்சி விற்கப்படுவதாக, சமூக வலைதளத்தில் வேகமாக பரவும், 'வீடியோ'வால், பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். சமீபத்தில், சமூக வலைதளங்களில், 'உறவுகள் மற்றும் நண்பர்களுக்கான எச்சரிக்கை பதிவு' என்ற, வாசகங்களுடன், கோழி இறைச்சி குறித்த தகவல் வெளியாகி, வேகமாக பரவுகிறது. அதில், பிராய்லர் கோழிகளுக்கு மருந்துகள் செலுத்தி, 45 நாட்களில் முழு வளர்ச்சி அடையச் செய்து, விற்பனைக்காக சந்தைக்கு வந்து விடுகின்றன. இப்போது, அதன் வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தி, 20 நாட்களில், சந்தைக்கு வரவழைக்கும் முயற்சியாக, கோழி தீவனத்தில், புதிய மருந்தை செலுத்துகின்றனர். இதனால், பல கோழிகளுக்கு, புற்றுநோய் கட்டிகள் உருவாவது தெரிய வந்தது. ஆனால், உற்பத்தியாளர்களும், நோயால் பாதிக்கப்படாத கோழிகளுடன், பத்தோடு பதினொன்றாய் சேர்த்து, இவற்றை விற்பனைக்கு அனுப்புகின்றனர்.இவற்றை சாப்பிடுவதால், பல்வேறு நோய் பாதிப்பு ஏற்படலாம். எனவே, மூன்று மாதத்திற்கு, கோழி இறைச்சி வாங்குவதை தவிர்க்க வேண்டும் என, அந்த பதிவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆதாரமற்ற தகவல்: இதுகுறித்து சென்னையை சேர்ந்த கோழி இறைச்சி வியாபாரிகள் கூறுகையில், 'சமூக வலைதளங்களில், இது போன்ற பல தகவல்கள் பரவுகின்றன. மக்களின் தேவைக்காக, விரைவான பிராய்லர் கோழி உற்பத்தி செய்யப்படுவது உண்மை தான். ஆனால், நோயால் பாதிக்கப்பட்ட இறந்த கோழிகளை, நாங்கள் வாங்குவதில்லை. எங்களை நம்பும் வாடிக்கையாளர்களுக்கு நல்ல இறைச்சியை கொடுக்கவே விரும்புகிறோம். மேலும், கார்த்திகை மாதத்தையொட்டி, வழக்கமான வியாபாரத்தில் இருந்து, 70 சதவீதம் விற்பனை குறைந்து விட்டது. இது தான் உண்மை நிலவரம்', என்றனர்.