ஜிஎஸ்டி வசூலில் மீண்டும் மந்த நிலை : மத்திய நிதி அமைச்சகம்

மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி மூலம் கிடைக்கும் வருவாய் கடந்த ஆண்டைவிட குறைந்தாலும் செப்டம்பர் மாதத்தைவிட அக்டோபர் மாதத்தில் வருவாய் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டைவிட 2019 அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரி மூலமாகக் கிடைக்கும் வருவாய் 5.3 சதவிகித வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. ஆனால், 2019 செப்டம்பர் மாதத்தைவிட அக்டோபரில் வருவாய் 3.76 சதவிகிதம் அதிகரித்ததாக மனதைத் தேற்றிக்கொண்டுள்ளது மத்திய அரசு. மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி வருவாய் 17,582 கோடி ஆகவும் மாநில ஜிஎஸ்டி வரி வருவாய் 23,674 கோடி ரூபாய் ஆகவும் உள்ளது. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி வருவாய் 46,517 கோடி ரூபாய். இதனுள் ஏற்றுமதிக்கான வரியும் அடங்கும். இந்த வருவாய் பட்டியலை தற்போது மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதனுடன் மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள விளக்கக் குறிப்பில், “2019 ஏப்ரல்- அக்டோபர் காலகட்டத்தில் 2018-ஐ விட உள்நாட்டு வருவாய் வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால், ஏற்றுமதிக்கான ஜிஎஸ்டி வீழ்ந்துள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது