அ.தி.மு.க-வில் சலசலப்பை உண்டாக்கிய வரவேற்பு

அமெரிக்க சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு வந்த ஓ.பி.எஸ்-ஸுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜனைத் தவிர எந்த அமைச்சர்களும் வரவேற்பு கொடுக்காதது அ.தி.மு.க-வில் மீண்டும் சலசலப்பைக் கிளப்பியுள்ளது. ஓ.பி.எஸ் வீட்டுக்குச் சென்று பார்க்கும் அமைச்சர்கள் ஏன் விமான நிலையத்துக்குள் வரவில்லை. முதல்வருக்காக பயப்படுகிறார்களா? ஏன் எடப்பாடிக்குக் கொடுக்கும் மரியாதை ஓ.பி.எஸ்ஸுக்கு கொடுக்காததற்கு என்ன காரணம் என்று கட்சியினர் பல கேள்விகளைக் கேட்கத் தொடங்கியுள்ளனர். அரசுமுறை பயணமாக, அமெரிக்கா சென்றுவந்துள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சிகாகோவில் உள்ள மெடோவ்ஸ் கன்வென்சன் சென்டரில் அமெரிக்க இன கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற 'உலகளாவிய சமூக ஆஸ்கர் விருது-2019' விழாவில் 'சர்வதேச வளரும் நட்சத்திரம் ஆசியா விருது' வழங்கப்பட்டது.கடந்த ஆண்டு இந்த அமைப்பு சார்பாக, இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம் என்ற விருது தமிழிசை சௌந்தரராஜனுக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் அன்னிய முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்று வந்த எடப்பாடிக்கு உச்சபட்ச வரவேற்புக் கொடுத்தார்கள். ஆனால், ஓ.பி.எஸ்ஸுக்கு வரவேற்பு கொடுக்கவில்லை என்பதுதான் புதிய சர்ச்சை. அ.தி.மு.க-வுக்குள் என்ன நடக்கிறது என்று ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம். ``முதல்வர் எடப்பாடி திட்டமிட்டே ஓ.பி.எஸ்ஸை ஓரங்கட்ட நினைக்கிறார். கட்சி மட்டுமல்ல ஆட்சியிலும் இதே நிலை நீடித்துக்கொண்டிருக்கிறது. உள்விவகாரங்கள் அறிந்தவர்களுக்கு நன்குத் தெரியும். தர்ம யுத்தம் நடத்தியபோது ஓ.பி.எஸ் பக்கம் சென்ற ஆதரவாளர்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பல சலுகைகளை செய்துகொடுத்து முதல்வர் பக்கம் திருப்பிக்கொண்டிருக்கிறார்அதேபோல் ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவாக இருந்த எம்.பி, எம்.எல்.ஏ-க்களையும் தன்வசப்படுத்திக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் எடப்பாடி வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு வந்தபோது 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் எனத் தடபுடலான உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆனால், அப்போது துணை முதல்வர் ஓ.பி.எஸ் மட்டும் விமான நிலையத்துக்குச் செல்லாமல் புறக்கணித்தார். இச்சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்வரை வரவேற்க விமான நிலையம் வராத ஓ.பி.எஸ்ஸை வரவேற்கச் சென்றால் கண்டிப்பாக முதல்வர் டென்ஷன் ஆகிவிடுவார் என்பதால் பல அமைச்சர்கள் வரவேற்பு பயணத்தைப் புறக்கணித்திருக்கிறார்கள். இந்தநிலையில், சென்னையிலிருந்த நிலையில் மாஃபா பாண்டியராஜன் மட்டுமே விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்றுள்ளார். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார் உள்ளிட்ட சில அமைச்சர்கள் மட்டும் ஓ.பி.எஸ் வீட்டுக்குச் சென்றிருந்தனர். இந்த விஷயத்தில் எடப்பாடி கோபித்துக்கொள்ளக் கூடாது என நினைத்த பல அமைச்சர்கள் விமான நிலையம் செல்லவில்லை" என்கின்றனர். இந்தநிலையில், அமெரிக்கா சென்று திரும்பிய ஓ.பி.எஸ்ஸை அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி, சரோஜா உள்ளிட்ட அமைச்சர்கள் வீட்டிற்கு நேரில் சென்று வரவேற்றிருக்கின்றனர்.