ராமநாதபுரத்தில் பள்ளி ஆண்டு விழாவில், செல்போன் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து

ராமநாதபுரத்தில் பள்ளி ஆண்டு விழாவில், செல்போன் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்கள் நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர்மெட்ரிக்குலேஷன் பள்ளியின் 9-வதுஆண்டு விளையாட்டு விழா, பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விளையாட்டு விழாவுக்கு பள்ளியின் முதல்வர் நந்தகோபால் தலைமை தாங்கினார். இதில், உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்துகடற்படை விமானத்தள கேப்டன் ஆர்.வெங்கடேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விளையாட்டு விழாவை தொடங்கி வைத்தார். ஐஎன்எஸ் பருந்து லெப்டினென்ட் விவேகானந்தன் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். விழாவில் மாணவர்கள் பிரமிடு, யோகா, கராத்தே, சிலம்பம் போன்ற சாகச நிகழ்ச்சிகளை நிகழ்த்திக் காண்பித்தனர். ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் நீதித் துறை நடுவர் ஜெ.ஜெனிதா, ராமநாதபுரம் வனச்சரகர் சதீஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு வகுப்புகளில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினர். ஆண்டு விழாவின்போது, மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்கள் மூலமாக இன்றைய மக்களின் சோம்பேறித்தனத்தால் ஆரோக்கியம் கெடுவது, செல்போன் பயன்பாட்டில் ஏற்படும் சீரழிவுகள், சுகாதாரமற்ற தெருக்களில் மாசு மற்றும் கொசுக்கள் பரவி டெங்கு போன்ற நோய்கள் பரவுவது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். விழாவுக்கு வந்திருந்த அனைத்துப் பெற்றோருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது ராமநாதபுரம் ரோட்டரி சங்க இயக்குநர் சண்முக ராஜேஸ்வரன், தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர்கள் பெர்னாடிட் (ராமநாதபுரம் கல்வி மாவட்டம்), தீனதயாளன் (பரமக்குடிகல்வி மாவட்டம்) உட்பட ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், கலந்துகொண்டனர்.