ஹிட்லரின் தங்கை போல் கவர்னர்: நாராயணசாமி காட்டம்

புதுச்சேரி: அமைச்சரவை முடிவுகளில் கவர்னர் தலையிடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டும் கவர்னர் மாளிகையில் அமர்ந்து கொண்டு தர்பார் நடத்துகிறார் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கொந்தளிப்புடன் பேசினார். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த நாளையொட்டி, இன்று புதுச்சேரி காங். சார்பில் கட்சி தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.இதில் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். புதுச்சேரி துணை நிலை கவர்னராக மாஜி ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடி நியமிக்கப்பட்ட நாள் முதல் முதல்வர் , கவர்னர் மோதல் அன்றாட பிரச்னையாக உருவெடுத்து வருகிறது.இன்று நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி ,கவர்னர் கிரண்பேடி மீது சரமாரியாக குற்றச்சாட்டை சுமத்தி கொந்தளிப்புடன் பேசினார். நாராயணசாமி பேசியது, எந்த அதிகாரங்களும் இல்லாத கவர்னர் , எனது அமைச்சரவை விவகாரங்களில் தலையிடுகிறார். நீதிமன்றம் உத்தரவிட்டும், அதனை மதிக்காமல் ,மாநில மக்களையும், வளர்ச்சியையும் பற்றி கவலைப்படாமல் கவர்னர் மாளிகையில் அமர்ந்து கொண்டு அதிகாரிகளை மிரட்டி 'தர்பார்' நடத்துகிறார். சர்வாதிகாரி ஹிட்லரின் தங்கை போல செயல்படும் கவர்னரிடம் செயலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார்.