அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு: வாபஸ் பெறப்பட்டதால் உயர் நீதிமன்றம் தள்ளுபடி

வரும் 24-ம் தேதி அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு திரும்பப் பெறப்பட்டதையடுத்து தள்ளுபடி செய்யப்பட்டது இந்த விவகாரம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் நிவாரணம் பெற்றுக் கொள்ள மனுதாரருக்கு அனுமதி அளித்தும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சேலத்தைச் சேர்ந்த கட்சி உறுப்பினர் சுந்தரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில் “கடந்த 2016-ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு, பிளவுபட்ட கட்சி, மீண்டும் இணைந்து. அதன் பிறகு பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்து விட்டு, ஓ.பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர். உறுப்பினர்களின் பரிந்துரை இல்லாமல் விதிகளுக்கு மாறாக இவர்கள் இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் ஆணையத்தில் 2019-ம் ஆண்டு இறுதிக்குள் உட்கட்சி தேர்தலை நடத்தி முடிப்பதாக கட்சி சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை தேர்தல் நடத்த எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. மாறாக உள்ளாட்சித் தேர்தல் குறித்து விவாதிக்க வரும் 24-ம் தேதி கட்சியின் பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உட்கட்சி தேர்தலை நடத்த கட்சியின் அவைத் தலைவருக்கு உத்தரவிட வேண்டும். பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்” என தனது மனுவில் கோரியுள்ளார். இந்த மனு நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் “அரசியல் கட்சிகளின் உட்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிடுவதில்லை, சின்னங்கள் தொடர்பான பிரச்சினை எழும்போது மட்டுமே தேர்தல் ஆணையம் தலையிடும்” என விளக்கமளித்தார். இதைத் தொடர்ந்து நீதிபதி, அரசியல் கட்சிக்கு உத்தரவிடக்கோரி ரிட் மனு தாக்கல் செய்ய முடியாது என்றும், இது தொடர்பாக சிவில் நீதிமன்றத்தில் நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் மனுதாரருக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து, மனுவை திரும்ப பெற மனுதாரர் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. திரும்பப் பெறப்பட்டதை அடுத்து, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஆதிகேசவலு உத்தரவிட்டார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்