மேயர்-நகரசபை தலைவர்களை கவுன்சிலர்களே தேர்வு செய்யும் முறை தொடர்பாக நாளை நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநிலத் தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. தேர்தலை இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள். உள்ளாட்சித் தேர்தலுக்கு தேவையான மின்னணு எந்திரங்கள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு விட்டன. தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தற்போது பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. வாக்காளர் பட்டியலும் தயார் நிலையில் உள்ளது. வார்டு வரையறைகளும் நிறைவு பெற்று விட்டன. இதையடுத்து மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று (திங்கட்கிழமை) கூடி ஆலோசனை நடத்துகிறார்கள். இந்த கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் தேதி முடிவு செய்யப்பட்டு, விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. இந்த நிலையில் வருகிற 24-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. எனவே அந்த கூட்டம் முடிந்த பிறகே தேர்தல் தேதி அட்டவணை வெளியாகும் என்று கூறப்படுகிறது. டிசம்பர் 2ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிட உள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் கூறி உள்ளது. அதன்படி, டிசம்பர் மாத இறுதியில் 2 கட்ட தேர்தல் நடைபெறலாம். அல்லது டிசம்பர் இறுதியிலும் ஜனவரி முதல் வாரத்திலும் ஓட்டுப்பதிவு நடத்தப்படலாம். இந்த நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். கூட்டத்தில் தமிழ்நாட்டில் தொழில்தொடங்க, புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுப்பது பற்றி ஆலோசித்து முடிவு எடுக்கப்படுகிறது. இது தவிர மக்களை கவரும் வகையில் சில புதிய திட்டங்களை அறிவிப்பது பற்றியும் நாளை முடிவு செய்யப்படுகிறது. அதோடு உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான முடிவும் எடுக்கப்பட உள்ளது. இத்தகைய காரணங்களால் நாளை நடைபெற உள்ள தமிழக அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தற்போதைய சட்டவிதிகளின்படி மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் மக்களால் ஓட்டுப்போட்டு நேரடியாக தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். இந்த சட்ட விதி காரணமாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு மட்டுமின்றி தலைவர் பதவிக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்து நிறுத்த வேண்டிய பணிகளை பிரதான கட்சிகள் செய்ய வேண்டியது உள்ளது. அதோடு வாக்காளர்களும் வார்டு உறுப்பினராக ஒருவருக்கும் தலைவராக இன்னொருவருக்கும் வாக்களிக்க வேண்டியநிலை ஏற்படுகிறது. எனவே வார்டு உறுப்பினர்கள் மூலம் மாநகராட்சி மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை தேர்வு செய்யும் முறையை கொண்டு வர அ.தி.மு.க. மேலிட தலைவர்கள் விரும்புகிறார்கள். உள்ளாட்சித் தேர்தலில் முன்பு இந்த நடைமுறைதான் கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்தபோது சட்டவிதிகளில் மாற்றம் செய்து மேயர் தலைவர்களை மக்களே நேரடியாக ஓட்டு போடும் முறையை கொண்டு வந்தார். மீண்டும் மேயரை, வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யும் முறையை கொண்டு வர வேண்டுமானால் உள்ளாட்சி சட்ட விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும். நாளை நடக்கும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் இந்த சட்டவிதி மாற்றம் பற்றி முடிவு எடுக்கப்படுகிறது. சட்டவிதியை மாற்ற அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும். நாளை இதுபற்றி முடிவு செய்து உடனடியாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 15 மாநகராட்சிகள், 123 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள் உள்ளன. இந்த உள்ளாட்சி அமைப்புகளின் மேயர், தலைவர் பதவிகளில் கணிசமான இடங்களை கைப்பற்ற வேண்டும் என்பதில் அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணியில் உள்ள தோழமை கட்சிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இது அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளுக்குமே தலைவலியாக மாறியுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் மேயர் மற்றும் தலைவர் பதவிகளை கேட்டு இப்போதே காய்களை நகர்த்த தொடங்கி விட்டன. அது போல தி.மு.க.வில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தலைவர் பதவிக்காக தி.மு.க.வை அணுகியுள்ளன. நாளை அமைச்சரவை கூட்டத்தில் உள்ளாட்சி சட்டவிதிகளில் திருத்தம் செய்து அவசரச் சட்டம் கொண்டு வரப்படும் பட்சத்தில் இந்த தலைவலிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடும். மாநகராட்சி மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை வார்டு உறுப்பினர்களே மறைமுக தேர்தல் நடத்தி தேர்வு செய்யும் முறை வந்தால், ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் கட்சிகளின் பலமே முக்கியத்துவம் பெறும். எந்த கட்சிக்கு அதிக வார்டு உறுப்பினர்கள் கிடைக்கிறார்களோ, அந்த கட்சி மிக, மிக எளிதாக மேயர் மற்றும் தலைவரை தேர்வு செய்யும். இந்த திட்டம் மூலம் கூட்டணி கட்சிகளை அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளாலும் சமாளிக்க முடியும். எனவே மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மறைமுகமாக தேர்வு செய்ய சட்டதிருத்தம் செய்யப்பட்டால் அதை தி.மு.க.வும் ஆதரிக்கும் என்று கருதப்படுகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!