முதல்வரின் பதில் வேதனை அளிப்பதாக திருமாவளவன் கருத்து!

தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக கருதி அரசியலில் ஈடுபட ஆர்வம் காட்டும் நடிகர்களை, மக்கள் உரிய மதிப்பீடு செய்வார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ட்விட்டர் பக்கத்திலும், பிள்ளையார்பட்டி மற்றும் பெரியகுளம் பகுதிகளிலும் திருவள்ளுவரை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் தொகை அடிப்படையில் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு போதிய இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். ஆளும் கட்சி தான் மற்ற கட்சிகளுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என கூறிய திருமாவளவன், கட்சி கொடி கம்பம் சாய்ந்து விபத்து ஏற்பட்ட விவகாரத்தில் தமிழக முதல்வரின் பதில் வேதனை அளிக்க கூடியதாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.