ஓய்வு பெறுகிறார் உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி: யாருக்கு வாய்ப்பு

உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி நாளையுடன் ஓய்வு பெறுகிறார். புதிய உள்துறைச் செயலர் யார் என்பது குறித்து பலரது பெயர் அடிபடுகிறது. யாருக்கு வாய்ப்புள்ளது என்பது குறித்து தலைமை செயலக வட்டாரத்தில் உலவும் பெயர்கள் குறித்து ஒரு அலசல் நிரஞ்சன் மார்டி 1986-ம் ஆண்டு பேட்சை சேர்ந்த நேரடி ஐஏஎஸ் அதிகாரி ஆவார். தமிழ்நாட்டைச்சேர்ந்தவர். 1959-ம் ஆண்டு பிறந்தவர். அடிப்படையில் மருத்துவம் படித்துவிட்டு பின்னர் சிவில் தேர்வெழுதி ஐஏஎஸ் ஆனார். நெல்லை ஆட்சியர், நகராட்சி நிர்வாக ஆணையர், நில நிர்வாகத்துறை ஆணையர், பொருளியல் மற்றும் புள்ளியல் துறை ஆணையர், தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர், சிறு, குறு. நடுத்தரத் தொழில்கள் துறையின் செயலாளர், நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறைச் செயலாளர், என பல பதவிகளை வகித்தவர். கடந்த 2013-ம் ஆண்டு உள்துறைச் செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்டார். பின்னர் மாற்றப்பட்டார். புள்ளியியல் மற்றும் பொருளியல் துறையின் ஆணையாளராக இருந்த நிரஞ்சன் மார்டி 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 3-ம் தேது உள்துறைச் செயலராக நியமிக்கப்பட்டார். அதே மார்ச் மாதத்தில் உள்துறை முதன்மைச் செயலாளராகவும் பதவி உயர்த்தப்பட்டார். இந்நிலையில் நாளையுடன் அவர் பதவி ஓய்வு பெறுகிறார். அவருக்குப்பின் யாரை உள்துறைச் செயலாளராக நியமிப்பது என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது. தலைமைச் செயலர், உள்துறைச் செயலர் பதவி இரண்டும் அரசுத்துறையில் முக்கிய நிர்வாகப்பணிகளாகும். ஐஏஎஸ் அதிகாரிகளின் கனவுப்பணியாகும். இந்தப்பதவிக்கு யாரை நியமிப்பது என்பது குறித்து ஆலோசனை முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. நிரஞ்சன் மார்டி 1986-ம் ஆண்டு பேட்ச் அதிகாரி ஆவார். அவருக்கும் சீனியர் அதிகாரிகள் 1985-ம் ஆண்டு பேட்ச் அதிகாரிகள் 7 பேர் உள்ளனர். இதில் சண்முகம் தலைமைச் செயலாளராக உள்ளார். அவரை யாரும் பரிசீலிக்க வாய்ப்பில்லை. அடுத்து மூத்த அதிகாரிகளாக 1.வி.கே.ஜெயக்கொடி உள்ளார். இவர் அடுத்த மாதம் ஓய்வு பெறுகிறார் அதனால் பரிசீலிக்கப்பட வாய்ப்பில்லை. அடுத்துள்ளவர்கள் 2.மீனாட்சி ராஜகோபால் 2021 மார்ச் மாதம் ஓய்வு, 3.ரோல்கும்லின் பஹ்ரில் இவர் அயல்பணியில் டெல்லியில் இருக்கிறார்(இவர் 2020 ஜூலை மாதம் ஓய்வு பெறுகிறார்),4.ராஜிவ் ரஞ்சன் (2021 செப்.ஓய்வு) டெல்லியில் அயல்பணியில் இருக்கிறார், 5.சந்திரமவுலி (2020 செப்.ஓய்வு) டெல்லி அயல் பணியில் இருக்கிறார்.6. ஜக்மோகன் சிங் ராஜு (2023 ஏப்.ஓய்வு). புதிய உள்துறைச் செயலர் 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடப்பதுவரை ஓய்வு பெறாத வயதுள்ளவராக இருக்கவேண்டும் என அரசு எண்ணுவதாக கூறுகின்றனர். அந்தப்படையில் இதில் ஜக்மோகன் சிங் ராஜு, ராஜிவ் ரஞ்சன் இருவரும் தகுதியாக உள்ளனர். ராஜிவ் ரஞ்சன் அயல்பணியில் உள்ளார். ஆனாலும் 2021 செப்டம்பரில் ஓய்வு என்பதால் அவர் பெயரையும் பரிசீலிக்க வாய்ப்புள்ளது. ஜக்மோகன் சிங் ராஜு பெயரை பரிசீலிக்க வாய்ப்பில்லை என்கின்றனர். அப்படியானால் 1986-ம் ஆண்டுக்குப்பின் உள்ள பேட்ச் ஐஏஎஸ் அதிகாரிகளே போட்டியில் உள்ளனர். இதில் நான்கு ஐஏஎஸ் அதிகாரிகள் பெயர் அடிபடுகிறது. நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையில் உள்ள எஸ்.கே. பிரபாகர் (1989-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்) முதல்வரின் துறைச் சார்ந்த அதிகாரி முதல்வருக்கு நன்கு அறிந்தவர் என்பதால் இவருக்கு வாய்ப்பு என்கின்றனர். அடுத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் உள்ள அதுல்யா மிஸ்ரா (1988-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி, உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்), சிறப்புத் திட்ட அமலாக்கத் துறையில் உள்ள ஹன்ஸ்ராஜ் வர்மா (1986-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி, ராஜஸ்தானை சேர்ந்தவர்) மேற்கண்ட மூவருடன் நான்காவதாக லெவல் 15-ல் உள்ள ககந்திப் சிங் பேடி பெயரும் அடிபடுகிறது. ஆனால் அவர் மிகவும் ஜூனியர் 1993-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். தற்போதுவரை கோட்டை வட்டாரத்தில் மேற்கண்டவர்கள் பெயர்கள் பர்சீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. நாளை இறுதியாக யார் பெயர் அதிகாரபூர்வமாக வெளியாகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்