கிராம நிர்வாக அலுவலர் மீது ஆசிட் வீசிய காவலர்!

திருவண்ணாமலை தென்றல் நகர் 9வது தெருவைச் சேர்ந்த சிவக்குமார் கிளப்பட்டு பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், வேங்கிக்கால் பகுதியைச் சேர்ந்த கியூ பிரிவு காவலர் ஸ்ரீபாலுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. நேற்றிரவு 12.30 மணிக்கு கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் வீட்டுக்கு சென்ற ஸ்ரீபால் அவரிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ஆத்திரமடைந்த ஸ்ரீபால் தான் கொண்டுவந்திருந்த ஆசீட்டை சிவக்குமார் மீது வீசினார். அவர் தடுக்க முயன்றபோது ஸ்ரீபால் மீதும் ஆசிட் பட்டது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர். தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் இரண்டு பேரையும் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக 2 பேரும் சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.