நள்ளிரவில் பட்டாக்கத்தியுடன் திரியும் கும்பல்

சென்னை விருகம்பாக்கத்தில் நள்ளிரவில் பட்டாக்கத்தியுடன் திரியும் கும்பல் வாகன ஓட்டிகளை மிரட்டியும், வாகனங்களை அடித்து நொறுக்கியும் அச்சுறுத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியுள்ள போலீசார் பட்டாக்கத்தி ரவுடி கும்பலை தேடி வருகின்றனர். சென்னை விருகம்பாக்கம் காந்தி நகரில் நள்ளிரவு நேரத்தில் கத்தியுடன் உலாவரும் ரவுடி கும்பல் அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வந்துள்ளனர். தினந்தோறும் இவர்கள் அட்டாகாசம் தாங்க முடியாமல் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தாலும் போலீசார் வாகனம் வரும் சத்தம் கேட்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிவிடுகின்றனர். போலீசார் சென்றதும் மீண்டும் வந்து அந்த வழியாக செல்பவர்களை கத்தியைக் காட்டி மிரட்டி வந்துள்ளனர். இந்த நிலையில், செவ்வாய்கிழமை நள்ளிரவில் காந்தி நகர் பகுதிக்கு பட்டாக்கத்தியுடன் வந்த 4 பேர் கொண்ட ரவுடி கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வருவதை பார்த்ததும் பொதுமக்கள் வீட்டிற்குள் சென்று கதவுகளை அடைத்துக் கொண்டனர். அங்கு நிறுத்தியிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியும், அவ்வழியாக செல்பவர்களை மிரட்டியும் சுமார் அரை மணி நேரம் அட்டகாசம் செய்தனர். இதையடுத்து தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். அந்த பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள், கார் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை அடித்து சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியுள்ள விருகம்பாக்கம் போலீசார் ரவுடி கும்பலை அடையாளம் கண்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.